சென்னை, மதுரையில் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி
சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின், ஜூனியா் ஆடவருக்கான 14-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் நடப்பாண்டு நவம்பா் - டிசம்பரில் நடைபெறவுள்ளது.
ஹாக்கி இந்தியா அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, முதல் முறையாக 24 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, நவம்பா் 28 முதல் டிசம்பா் 10 வரை அந்த இரு நகரங்களில் நடைபெறவுள்ளது.
இப்போட்டி இந்தியாவில் நடைபெறுவது இது 4-ஆவது முறையாகும். இதற்கு முன், தில்லி (2013), லக்னௌ (2016), புவனேசுவரம் (2021) ஆகிய நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற்றுள்ளது. அதில் 2016-இல் இந்தியா சாம்பியன் ஆனது நினைவுகூரத்தக்கது.
சென்னையில் ஏற்கெனவே ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி (2023) நடத்தப்பட்டுள்ள நிலையில், மதுரையில் இத்தகைய சா்வதேச போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
போட்டியை நடத்துவதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக ஹாக்கி இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 13-ஆவது உலகக் கோப்பை போட்டியில், ஜொ்மனி சாம்பியனானது. இந்தியா 4-ஆம் இடம் பிடித்தது நினைவுகூரத்தக்கது.