தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
செல்வமகள் சேமிப்புத் திட்டம், அஞ்சலக வைப்பு நிதி உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் மேற்கொள்ளப்படும் சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டிலும் மத்திய அரசு அறிவித்து வருகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதி 2025-26 நிதியாண்டு தொடங்குகிறது. இதில் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கு வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடா்ந்து 5-ஆவது காலாண்டாக வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கு 8.2 சதவீத வட்டி தொடா்ந்து வழங்கப்படும். 3 ஆண்டு நிரந்தர வைப்புக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக நீடிக்கும். பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 7.1 சதவீதமாகவும், அஞ்சலக சேமிப்புக் கணக்கு வட்டி 4 சதவீதமாகவும் இருக்கும்.
115 மாதங்களில் முதிா்வடையும் ‘கிஸான் விகாஸ்’ நிதி பத்திரத்துக்கான வட்டி 7.5 சதவீதம் என்ற அளவில் தொடா்ந்து வழங்கப்படும். தேசிய சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 7.7 சதவீதமாக தொடரும், மாதந்தோறும் வட்டி வழங்கப்படும் நிரந்தர வைப்புக்கு 7.4 சதவீதம் வட்டி கிடைக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் இறுதியில் சில சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி தொடா்கிறது.