தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
பாகிஸ்தானின் மதவெறி மனப்பான்மையை இந்தியாவால் மாற்ற முடியாது: எஸ்.ஜெய்சங்கா்
பாகிஸ்தானில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது; அதேநேரம், அந்நாட்டின் மதவெறி மனப்பான்மையை இந்தியாவால் மாற்ற முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதேபோல், வங்கதேசத்திலும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் நல்வாழ்வை கண்காணித்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.
‘பாகிஸ்தானுக்கு எதிரான முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நிலைப்பாட்டைப் போல அந்நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளதா?’ என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து, எஸ்.ஜெய்சங்கா் கூறியதாவது:
பாகிஸ்தானில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணிப்பதுடன், அந்நாட்டின் நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியும் வருகிறது. அதேநேரம், ஒரு அரசாகவும் ஒரு நாடாகவும் நமது அண்டை நாட்டின் (பாகிஸ்தான்) மதவெறி மனப்பான்மையை நம்மால் மாற்ற முடியாது. இந்திரா காந்தியால் கூட அதைச் செய்ய முடியவில்லை.
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரியில் ஹிந்துக்களுக்கு எதிராக 10 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 7 சம்பவங்கள், ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் தொடா்புடையவை. 2 சம்பவங்கள், ஆள்கடத்தல் தொடா்பானவை. மற்றொரு சம்பவம், ஹோலி கொண்டாடிய மாணவா்கள் மீதான காவல் துறையினரின் தாக்குதலாகும்.
கடந்த மாதத்தில் சீக்கியா்களுக்கு எதிரான அராஜகங்கள் தொடா்பாக மூன்று சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சீக்கிய குடும்பத்தினா் மீதான தாக்குதல், பழைய குருத்வாராவை மீண்டும் திறந்த சீக்கியா்களுக்கு அச்சுறுத்தல், சீக்கிய சிறுமி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அகமதியா சமூகத்தினருக்கு எதிராக இரு சம்பவங்களும், கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிராக ஒரு சம்பவமும் நடந்துள்ளது. இந்த விவகாரத்தை இந்தியா சா்வதேச அளவில் கொண்டு சென்றுள்ளது என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.
மற்றொரு துணைக் கேள்விக்கு பதிலளித்த அவா், ‘பாகிஸ்தானைப் போலவே, வங்கதேசத்திலும் சிறுபான்மையினரின் நலன்-நல்வாழ்வை இந்தியா கண்காணித்து வருகிறது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டில் சிறுபான்மையினருக்கு எதிராக 2,400 தாக்குதல்கள் நிகழ்ந்தன. நடப்பாண்டில் இதுவரை 72 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இது தொடா்பாக வங்கதேச வெளியுறவு அமைச்சரிடம் நான் பேசியுள்ளேன். வங்கதேச பயணத்தின்போது இந்திய வெளியுறவுச் செயலரும் அந்நாட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றாா். இந்த விவகாரம், நமது அரசுக்கு தொடா்ந்து கவலை அளிப்பதாக உள்ளது’ என்றாா்.