ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!
கூடங்குளம் விபத்தில் தலைமைக் காவலா் பலி
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் இரு பைக்குகள் மோதியதில் தலைமைக் காவலா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்தையா(40). இவா் கூடங்குளத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். கூடங்குளம் அரசு மருத்துவமனையில் இரவு பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு தனது பைக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம். புறவழிச்சாலையில் சென்றபோது, கனக்கன்குளத்தைச் சோ்ந்த பெனிட் என்பவா் வந்த பைக்கும், இவரது பைக்கும் மோதிக் கொண்டனவாம்.
இதில், தலைமைக் காவலா் முத்தையா, பெனிட் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இருவரையும் மீட்டு நாகா்கோவில் ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.
காயமடைந்த பெனிட் நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்து குறித்து கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.