மோடி அரசால் வணிகமயமாகும் கல்வி முறை! -சோனியா காந்தி
புது தில்லி: மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ‘கல்வித்துறையில் அதிகாரம், வணிகமயமாக்கல், வகுப்புவாதம் (சென்ட்ரலைசேசன், கமர்சியலைசேசன், கம்யூனலைசேசன்)’ ஆகியவற்றுக்கானதொரு கருவியாக, கல்விக் கொள்கையை மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருவதாக விமர்சித்துள்ளார்.
"கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசின் நடவடிக்கைகளை பார்க்கும் போது, கல்வியில் தமது மூன்று முக்கிய கொள்கைகளை அமல்படுத்துவதிலேயே தீவிரமாக இருப்பதை அறிய முடிகிறது. ‘கல்வியில் முழு அதிகாரத்தையும் மத்திய அரசு நிர்வகித்தல், கல்வியை வணிகமயமாக்கல் மற்றும் கல்வித் துறையில் தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல், பாடப்புத்தகங்கள், பாடங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் வகுப்புவாதத்தை திணித்தல்’ ஆகிய கொள்கைகளை அமல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது” என்ற கருத்தை தெரிவித்துள்ளார் சோனியா காந்தி.
கடந்த 11 ஆண்டுகளாக இந்த அரசின் செயல்பாடுகள் கல்வித்துறையை சிதைக்கும் அளவுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
“முக்கிய விவகாரங்களில் முடிவுகளை எடுக்கும்போது, மாநில அரசுகளை புறந்தள்ளிவிடும் நடைமுறையை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. மத்திய, மாநில அமைச்சர்கள் இணைந்து அங்கம்வகிக்கும் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர்முதல் நடத்தப்படவேயில்லை” என்றும் தெரிவித்துள்ளார் சோனியா காந்தி.
“சிறார்களுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை முறையாக அமல்படுத்திட தேவையான நிதியுதவி சர்வ சிக்ஷா அபியான்(எஸ்எஸ்ஏ) மூலம் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிலையில், பிஎம் - ஸ்ரீ திட்டத்தை மாநிலங்களில் அமல்படுத்துவதற்காக மாநில அரசுகளுக்கு சர்வ சிக்ஷா அபியான்(எஸ்எஸ்ஏ) திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு மறைமுகமாக மிரட்டி வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற நிலைக்குவும் எஸ்எஸ்ஏ நிதியை மத்திய அரசு ஒதுக்கிட தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கை பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்கலைக்கழக மானிய குழுவுக்கான புதிய நெறிமுறைகள் 2025-இல் வகுக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக துணை-வேந்தர் நியமன விவகாரத்தில் மாநில அரசுகளின் பங்களிப்பையும் அதிகாரத்தையும் குறைப்பதை இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த நடவடிக்கையானது ‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்கிற சித்தாந்தத்துக்கான மாபெரும் அச்சுறுத்தலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார் சோனியா காந்தி.
பள்ளிக் கல்வியை தனியார்மயமாக்கலை நோக்கி மத்திய அரசு நகர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல், சுமார் 90,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாகவும், அதேவேளையில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் சுட்டிக்கட்டி மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை மீதான விமர்சனத்தை முன்னிலைப்படுத்தியிருக்கிறார் சோனியா காந்தி.
பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் கடன் வாங்கும் சூழலுக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் அவற்றை தள்ளியிருப்பதாகவும், இதன்காரணமாக, மாணவர்களுக்கான கல்விக் கட்டணமும் மேற்கண்ட உயர்கல்வி நிறுவனங்களில் அதிகம் வசூலிக்கப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.
கல்வி அமைப்பின் மூலம் மத்திய அரசு வெறுப்புணர்வை விதைக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் சோனியா காந்தி.
இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது: “மகாத்மா காந்தியடிகள் கொல்லப்பட்ட சம்பவத்தைப் பற்றிய குறியீடுகளும், முகலாய வரலாற்றைப் பற்றிய குறியீடுகளும் மத்திய கல்வி முறையின் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் நீக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கண்ட பாடப்புத்தகங்களை மறுஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கல்வியில் சிறந்து விளங்குவோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படாமல், சித்தாந்த ரீதியாக தீவிரமாக இருப்பவர்கள் கல்வித்துறையில் முக்கிய நிறுவனங்களில் உயர்பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் சோனியா காந்தி.
பேராசிரியர்கள் மற்றும் துணை-வேந்தர்களுக்கான தகுதியை தரம் தாழ்த்துதலே அரசின் கொள்கைகளுள் ஒன்றாக உள்ளதாகவும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் அவர்.
இந்தியாவின் பொது கல்வி அமைப்பை இரக்கமின்றி அழிக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாகவும், கடந்த பத்தாண்டுகளில் நமது கல்வி முறைகளில் ‘பொது சேவை’ என்கிற உணர்வு திட்டமிட்டு துடைத்தெறியப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார் சோனியா காந்தி.
கல்வியின் தரத்தை குறித்து கல்விக் கொள்கை வகுக்கப்படும்போது கண்டுகொள்வதேயில்லை என்பதும் தெளிவாகிறது என்று கடும் விமர்சனங்களை மத்திய அரசின் மீது சுமத்தியுள்ளார் சோனியா காந்தி.