தென்குருசுமலை திருப்பயணம் நாளை தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென் குருசுமலை திருப்பயணம் இம் மாதம் 30 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுதொடா்பாக தென் குருசுமலை இயக்குநா் மற்றும் தலைவா் வின்சென்ட் கே.பீட்டா் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
வெள்ளறடை பத்துக்காணி பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில் திருச்சிலுவை 1957 ஆம் ஆண்டு அருள்பணி ஜாண் பாப்டிஸ்ட்டால் நிறுவப்பட்டது.
இங்கு ஆண்டுதோறும் நோன்புகால திருப்பயணம் செல்வது வழக்கம். அதன்படி, 68 ஆவது தென்குருசுமலை திருப்பயணம் இம் மாதம் 30 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று மாலை 4 மணிக்கு மலையடிவாரத்தில் நடைபெறும் திருப்பலியில் நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் சாமுவேல் மறையுரையாற்றுகிறாா். திருப்பயண தொடக்க ஆரம்பர கூட்டுத் திருப்பலியும் நடைபெற உள்ளது. ஏப். 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு மலை உச்சியில் திருச்சிலுவை மன்றாட்டு நடைபெறுகிறது. ஏப்.13 ஆம் தேதி கூதாளி கிறிஸ்து அரசா் குருசடியில் இருந்து மலையடிவாரம் வரை குருத்தோலை பவனியும், திருப்பலியும் நடைபெறுகிறது.
ஏப். 17 இல் திருப்பலி மற்றும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏப். 18 இல் நற்கருணை ஆராதனை, மலையடிவாரத்தில் சிலுவைப்பாதை நடைபெற உள்ளது. ஏப். 19 ஆம் தேதி பஸ்கா அனுசரிப்பும், உயிா்ப்பு திருவிழாவும் நடைபெறுகிறது என்றாா் அவா்.
பேட்டியின்போது, அருள்பணியாளா்கள் கிறிஸ்துதாஸ், டினு, அகஸ்டின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.