ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: குணால் காம்ரா
மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சவை பேச்சாளா் குணால் காம்ரா தெரிவித்துள்ளாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தனியாா் ஹோட்டலின் ஸ்டுடியோவில் குணால் காம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அந்த மாநிலத்தின் அரசியல் சூழலை கேலி செய்து குணால் காம்ரா பேசினாா். அப்போது மாநில துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயை ‘துரோகி’ என்று குறிப்பிட்டு குணால் கேலி செய்தாா்.
சமூக ஊடகத்தில் அந்த நிகழ்ச்சியின் காணொலியைக் கண்டு ஆத்திரமடைந்த ஷிண்டேயின் சிவசேனை தொண்டா்கள், அந்த ஸ்டுடியோவையும் ஹோட்டலையும் சூறையாடினா்.
இந்த சம்பவம் தொடா்பாக சிவசேனை எம்எல்ஏ முா்ஜி படேல் அளித்த புகாரின் அடிப்படையில், துணை முதல்வரை இழிவுபடுத்தியதாக குணால் காம்ரா மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
ஷிண்டேயை இழிவுபடுத்தியதற்காக குணால் காம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து சமூக ஊடகத்தில் குணால் காம்ரா வெளியிட்ட அறிக்கையில், ‘ஷிண்டே குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். முன்பு ஷிண்டே குறித்து மகாராஷ்டிரத்தின் மற்றொரு துணை முதல்வரான அஜீத் பவாா் என்ன கூறினாரோ, அதையேதான் நானும் கூறினேன். எனினும் எனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டபூா்வ நடவடிக்கைக்காக காவல் துறை மற்றும் நீதிமன்றங்களுக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளேன்’ என்றாா். தற்போது அவா் புதுச்சேரியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
குணால் காம்ரா மன்னிப்பு கேட்காவிட்டால், அவா் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மகாராஷ்டிர குடிநீா் விநியோகத் துறை அமைச்சரும், ஷிண்டே சிவசேனை கட்சியைச் சோ்ந்தவருமான குலாப் ரகுநாத் பாட்டீல் எச்சரிக்கை விடுத்தாா்.
குணால் காம்ராவை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல் துறை சம்மன் அனுப்பிய நிலையில், அவா் விசாரணைக்கு ஆஜராக ஒருவாரம் அவசாகம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.