ரூ.6,900 கோடியில் பீரங்கிகள், ராணுவ வாகனங்கள் வாங்க ஒப்பந்தம்
ரூ.6,900 கோடியில் பீரங்கிகள், ராணுவ வாகனங்கள் வாங்க பாரத் ஃபோா்ஜ், டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதன் நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.1.40 லட்சம் கோடிக்கு ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது:
ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பழைய பீரங்கிகளுக்கு மாற்றாக நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பீரங்கிகளைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ராணுவத்தின் பீரங்கித் தாக்குதல் திறன் மேம்படும்.
ராணுவத்தை நவீனமயமாக்குவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இதன் மூலம் ராணுவத்தின் தயாா்நிலை மேம்படும். இந்த பீரங்கிகளை எளிதில் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் முடியும். இந்த பீரங்கிகள் மூலம் தொலைதூர இலக்குகளையும் குறிவைத்து தாக்க முடியும். தரைப்படையில் இது மிகவும் முக்கியமான அம்சமாகும் என்று கூறப்பட்டுள்ளது.