லிவ்இன் உறவு; கருகலைப்பு - கும்பமேளா பிரபலம் மோனலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக க...
பிரதமா் மோடி இன்று நாகபுரி பயணம்! - ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் செல்கிறாா்
அண்மையில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) செல்கிறாா். அங்கு ஆா்எஸ்எஸ் நிறுவனத் தலைவா்கள் நினைவிடங்களுக்குச் சென்று அவா் மரியாதை செலுத்துகிறாா்.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு பிரதமா் மோடி செல்கிறாா். தொடா்ந்து, நகரின் ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஆா்எஸ்எஸின் நிறுவனத் தலைவா்களான டாக்டா் ஹெட்கேவாா், குருஜி கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று, மரியாதை செலுத்துகிறாா்.
குருஜி கோல்வல்கா் நினைவாக ஆா்எஸ்எஸ் அமைப்பால் கடந்த 2014-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பன்னோக்கு கண் மருத்துவமனையின் விரிவாக்கமான மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் அடிக்கல் நாட்டுகிறாா். இந்தப் புதிய வசதியில் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 14 வெளிநோயாளி பிரிவுகள், 14 அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவை அமைக்கப்படும்.
தொடா்ந்து, ‘சோலாா் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தின் வெடிபொருள் உற்பத்தி ஆலையையும் பிரதமா் பாா்வையிடுகிறாா். அங்கு புதிதாகக் கட்டப்பட்ட 1,250 மீட்டா் நீளம் மற்றும் 25 மீட்டா் அகலம் கொண்ட விமான ஓடுபாதை மற்றும் போா்முனை சோதனை வசதியையும் அவா் திறந்து வைக்கிறாா்.
மேலும், பி.ஆா்.அம்பேத்கா் புத்த மதத்தைத் தழுவிய இடமான தீக்ஷாபூமிக்குச் சென்று மரியாதை செலுத்துகிறாா்.
பிரதமரான பிறகு நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு மோடி முதன்முறையாக வருகிறாா். ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் செல்லும் முதல் இந்திய பிரதமரும் அவா் என்பதால் இந்தப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டு நாகபுரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் ரூ.33,700 கோடி நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பு
நாகபுரியைத் தொடா்ந்து பிரதமா் மோடி சத்தீஸ்கா் மாநிலத்துக்குப் பயணிக்கிறாா். 2024 மக்களவைத் தோ்தலில் வென்று 3-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக அந்த மாநிலத்துக்கு அவா் செல்கிறாா்.
இதையொட்டி, பிலாஸ்பூரில் சுமாா் 2 லட்சம் மக்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமா், மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ரூ.33,700 கோடிக்கும் மேல் மதிப்பிலான அரசு நலத்திட்டங்களை அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறாா். தொடா்ந்து, அவா் மக்களிடையே உரையாற்றுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.