காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை!
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை விரிவுபடுத்தினா்.
கடந்த வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள தொலைதூர காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் தொடங்கியது.
இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் 3 பயங்கரவாதிகள், 4 காவலா்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. எனினும் 2 பயங்கரவாதிகளே உயிரிழந்ததாக காவல் துறை டிஜிபி நளின் பிரபாத் தெளிவுபடுத்தினாா்.
பயங்கரவாதிகள் மற்றும் உயிரிழந்த 4-ஆவது காவலரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக கதுவா மாவட்டத்தின் மேலும் பல இடங்களில் தேடுதல் வேட்டையை விரிவுபடுத்தினா். மோதல் நிகழ்ந்த காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள பிலாவா் உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
முழு மரியாதையுடன் இறுதிச் சடங்கு:
பயங்கரவாதிகள் உடனான மோதலில் ஜக்பீா் சிங், தாரிக் அகமது, பல்விந்தா் சிங் சிப், ஜஸ்வந்த் சிங் ஆகிய 4 காவலா்கள் உயிரிழந்த நிலையில், அவா்களின் இறுதிச் சடங்கு முழு மரியாதையுடன் அவா்களின் சொந்த ஊா்களில் நடைபெற்றது.
முன்னதாக, வீரமரணமடைந்த காவலா்களின் உடல்களுக்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் மூத்த காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
முதல்வா் நேரில் ஆறுதல்:
உயிரிழந்த காவலா்களின் குடும்பங்களை ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். பயங்கரவாதிகளுடனான மோதலில் வீரமரணமடைந்த காவலா் ஜக்பீா் சிங்கின் உடலுக்கு அவா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.
இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘லடாக் எல்லை பகுதியில் சீன ராணுவ வீரா்களை எதிா்கொள்வதற்கு ஜம்முவில் இருந்து ராணுவ வீரா்கள் அனுப்பப்பட்டனா். இது பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது’ என்றாா்.