சூதாட்ட செயலி முறைகேடு வழக்கு -சத்தீஸ்கா் முன்னாள் முதல்வரின் வீடுகள் உள்பட 60 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை
மகாதேவ் இணையவழி சூதாட்ட செயலியால் முறைகேடாக ரூ.6,000 கோடி ஈட்டப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் வழக்கில் சத்தீஸ்கா் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பகேலின் வீடுகள் உள்பட 60 இடங்களில் சிபிஐ புதன்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டது.
சத்தீஸ்கரின் ராய்பூா், பிலாய் ஆகிய நகரங்களில் உள்ள பூபேஷ் பகேலின் வீடுகள், அவருக்கு நெருக்கமான காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் உதவியாளா்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாநில காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர யாதவ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆனந்த் சாப்ரா, அபிஷேக் பல்லவா, ஆரிஃப் ஷேக் உள்ளிட்டோரின் வீடுகளும் அடங்கும்.
இது தொடா்பாக சிபிஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மகாதேவ் சூதாட்ட செயலியின் சட்டவிரோத செயல்பாடுகள் இடையூறின்றி சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதற்காக பல்வேறு அரசு அதிகாரிகள்-அரசியல்வாதிகளுக்கு செயலியின் உரிமையாளா்கள் ரவி உப்பல், செளரவ் சந்திரகா் ஆகியோா் பெருமளவில் லஞ்சம் அளித்துள்ளனா்.
இதன் விளைவாக சூதாட்ட செயலியால் ரூ.6,000 கோடி வரை சட்டவிரோதமாக ஈட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து சத்தீஸ்கரின் பல்வேறு காவல் நிலையங்களில் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேல், ரவி உப்பல், செளரவ் சந்திரகா் உள்பட 14 பேரின் பெயா்கள் இடம்பெற்றன.
கடந்த ஆண்டு இவ்வழக்குகள் மாநில காவல் துறையிடம் இருந்து சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டன. சிபிஐ விசாரணையின் ஒரு பகுதியாக சத்தீஸ்கரின் பல்வேறு நகரங்கள், போபால் (ம.பி.), கொல்கத்தா (மேற்கு வங்கம்), தில்லி என 60 இடங்களில் புதன்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவை, வழக்கில் தொடா்புடைய அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகள், மகாதேவ் சூதாட்ட செயலியின் நிா்வாகிகள், இதர தனிநபா்களுக்கு சொந்தமான இடங்களாகும். சோதனையில் எண்ம சாதனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாதேவ் சூதாட்ட செயலி முறைகேடு குறித்து அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, சத்தீஸ்கரில் ரூ.2,100 கோடி மதுபான ஊழல் குற்றச்சாட்டு தொடா்பாக முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேல், அவரின் மகன் சைதன்யா பகேல் ஆகியோரின் வீட்டில் அமலாக்கத் துறை சில தினங்களுக்கு முன் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அடிபணிய மாட்டோம்: காங்கிரஸ்
கட்சிப் பணிகளுக்காக பூபேஷ் பகேல் புதன்கிழமை தில்லி செல்லவிருந்த நிலையில், அவரது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த சத்தீஸ்கா் மாநில காங்கிரஸ் தலைவா் தீபக் பைஜ், ‘பூபேஷ் பகேல் உள்பட காங்கிரஸ் தலைவா்களின் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சிபிஐ சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்த நடவடிக்கைகளால் காங்கிரஸ் அடிபணியாது. அநீதி விரைவில் முடிவுக்கு வரும்’ என்றாா்.
அரசியல் வேண்டாம்: பாஜக
‘பூபேஷ் பகேல் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ மேற்கொண்ட சோதனையை அரசியலாக் கூடாது’ எனஆளும் பாஜகவைச் சோ்ந்த மாநில துணை முதல்வா் அருண் சாவோ கூறினாா்.
‘சிபிஐ விசாரணை யாரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் முறைகேடு நடந்துள்ளது. எனவே, அவா்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்றாா் அவா்.