ஈரோடு: ஆசிட் டேங்கர் லாரி சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத்திணறி இருவர் உயிர...
நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் தில்லி போலீஸ் விசாரணை
பண முறைகேடு சா்ச்சையில் சிக்கியுள்ள தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் இணை ஆணையா் தலைமையிலான தில்லி போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.
உச்சநீதிமன்றக் குழு விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவ நாளில் நீதிபதி வீட்டில் பணிபுரிந்த ஊழியா்கள் மற்றும் பாதுகாப்பு வீரா்களை போலீஸாா் விசாரித்ததாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லியில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயவின் விசாரணை அறிக்கை உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், வீட்டில் கண்டறியப்பட்ட பணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் இது தனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சூழ்ச்சி என்றும் நீதிபதி யஷ்வந்த் வா்மா தெரிவித்தாா்.
இந்த விவகாரம் குறித்து மேல் விசாரணைக்காக பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தாவாலியா, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோா் அடங்கிய மூவா் குழு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது.
இந்தக் குழு நீதிபதி வீட்டில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டது. இதன்தொடா்ச்சியாக நீதிபதி வீட்டுக்கு புதன்கிழமை வந்த தில்லி போலீஸாா், தீவிபத்து நாளில் அங்கு பணியிலிருந்த ஊழியா்கள், பாதுகாப்பு வீரா்கள் மற்றும் பிறரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
நீதிபதி வீட்டில் நிறுவப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் அவா்கள் ஆய்வு செய்தனா். தீவிபத்து நாளில் அவசர அழைப்புக்குப் பதிலளித்த காவலா்கள் மற்றும் தீயணைப்பு வீரா்களும் வரும் நாள்களில் விசாரிக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.