செய்திகள் :

``ஒரு வார்டு எலெக்‌ஷனில்கூட நிற்கவில்லை; அதற்குள் அடுத்த முதல்வராம்’’ - திருமா காட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தென்பள்ளிப்பட்டில், வி.சி.க தேர்தல் அங்கீகார வெற்றி விழா நேற்று இரவு நடைபெற்றது. வி.சி.க மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். திருமாவளவன் பேசும்போது, `` `திருவண்ணாமலை தீபமாய்’ என்று கேட்கும் அளவுக்கு சிறுத்தைகள் நடத்துகிற தீபத்திருவிழாவாக இந்த மகளிர் கொண்டாட்டம் நடைபெற்றுகொண்டிருக்கிறது. மேடை பின்புறத்தில் திருவண்ணாமலை மலை பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெறும் மலையாக இருந்தால், அது எந்த மலை என்றுத் தெரியாது. எனவே, அண்ணாமலையார் கோபுரத்தையும் பக்கத்தில் வைக்கச் செய்தேன்.

பலருக்கும் வியப்பாக இருக்கலாம். `கடவுள் நம்பிக்கை இல்லாத திருமாவளவன் மலையைப் பின்புறமாக வைத்ததோடு மட்டுமில்லாமல், அண்ணாமலையார் திருக்கோயிலின் விண்ணுயர உயர்ந்திருக்கும் கோபுரத்தையும் வைத்திருக்கிறாரே... அதில் சிவ சிவ என்றும் எழுதியிருக்கிறாரே... என்ன ஆனது திருமாவளவனுக்கு?’ என்று பகுத்தறிவாளர்களும் விமர்சிப்பார்கள். `சிவ பக்தர்களின் வாக்குகளுக்காக திருமாவளவன் இப்படி மேடை அமைத்திருக்கிறார்?’ என்று சங்கிகளும் விமர்சிப்பார்கள். விமர்சனங்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.

திருமாவளவன்

`என்ன பெரிய சாதனையை சாதித்துவிட்டீர்கள்... வெற்றிவிழா கொண்டாடுகிறீர்கள்?’ என்று சிலருக்கு வயிற்றெரிச்சல். இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல... இந்திய அளவில் அரசியல் களத்தை உற்றுநோக்குகிற அனைவரும் வி.சி.க-வை வியப்போடு பாராட்டுகிறார்கள். இது ஒரு மகத்தான சாதனை. வரலாற்றுச் சாதனை. தி.மு.க-வுக்கெதிரான விமர்சனங்கள் அண்ணா காலத்திலிருந்தே தொடர்கிறது. தி.மு.க-வை வீழ்த்துகிற முயற்சி இன்றைக்கு நேற்றைக்கு தொடங்கியது அல்ல... இன்றைக்கு அரசியல் விடலைகள் சிலர் தி.மு.க-வை சவாலுக்கு இழுக்கிறார்கள். ஆனால், களத்தில் தொடர்ந்து விமர்சனங்களை முறியடித்து தி.மு.க ஆட்சிக்கு வந்துகொண்டேயிருக்கிறது. அந்தக் கட்சியோடு வி.சி.க கொள்கை புரிதலோடு கைகோத்து களமாடுகிறது. இதுதான் பலரின் வயிற்றிலே புளி கரைக்கிறது. வி.சி.க எடுத்திருக்கிற உறுதியான கொள்கை நிலைப்பாட்டினால்தான் இப்போது தமிழ்நாட்டு அரசியலின் திசை வழி மாறியிருக்கிறது.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுடெல்லிக்குபோய் அமித் ஷாவை பார்த்ததும் வி.சி.க-வின் கொள்கை நிலைப்பாடுதான் காரணம். இன்றைக்கு கட்சி தொடங்கி, முதல் பொதுக்குழு நடத்தியிருக்கிற நடிகரும் தலைவரும் நமக்கு நண்பருமான விஜய் அவர்களின் கட்சிப் பொதுக்குழுவிலும் இன்றைக்கு வி.சி.க-வை விமர்சிக்கிறார்களென்றால், அந்த விமர்சனத்துக்கும் காரணமும் வி.சி.க எடுத்திருக்கிற உறுதிமிக்க கொள்கை நிலைப்பாடுதான். இவர்களைத் தடுமாற வைத்திருக்கிறது வி.சி.க-வின் நிலைப்பாடு. இதுதான் இன்றைய தமிழக அரசியல். தமிழக அரசியலின் மையப்புள்ளியாக விடுதலை சிறுத்தைகள் தான் இருக்கிறது என்பதையும் மறந்துவிடக்கூடாது.

விஜய்

விவாதங்களில் பேசுபவர்கள் அதைக் கடந்துபோவார்கள். திருமாவளவனுக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்துவிடும் என்று பேசமாட்டார்கள். `தி.மு.க-வுக்கு கொத்தடிமை, தி.மு.க-வுக்கு சொம்படிக்கிறார், இரண்டு சீட்டுக்காக அங்கேயே கிடப்பார்’ என்று விமர்சிப்பதற்கு மட்டும் என் பெயரை எடுப்பார்கள். அட மூடர்களே, அர்ப்பர்களே உங்களுக்குக் களத்தில் பணியாற்றிய அனுபவம் இருந்தால், சிறுத்தைகளின் வரலாறு உங்களுக்குத் தெரிந்திருக்கும். சிறுத்தைகளின் போராட்டம் என்னவென்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த 25 ஆண்டுகால தேர்தல் அரசியலில் வி.சி.க எடுத்திருக்கிற ஒவ்வொரு நிலைப்பாடும், ஒரு கொதிநிலையில் இருந்து எடுத்த நிலைப்பாடு. கடுமையான நெருக்கடிகளில் இருந்து எடுத்த நிலைப்பாடு. ஒரு ஊசலாட்டம் இருந்திருந்தால், தடுமாற்றம் இருந்திருந்தால், கொள்கைத் தெளிவில்லாமல் இருந்திருந்தால், குழப்பத்தோடு இருந்திருந்தால், தன்னலத்தோடு சிந்தித்திருந்தால், என்னை மட்டுமே முன்னிறுத்தியிருந்தால் என்னுடைய முடிவுகள் தவறாக இருந்திருக்கும். என்னால் 25 ஆண்டுகாலம் தாக்குப்பிடித்து களத்திலேயே நின்றிருக்க முடியாது. இவ்வளவு தூரமும் பயணத்திருக்க முடியாது.

தலித் அல்லாதவர்களும் இந்தக் கட்சியில் வரவேண்டும் என்று நான் அழைப்பு விடுத்தேன். எல்லா பொறுப்புகளையும் டாப் டு பாட்டம் மறுகட்டமைத்தேன். அப்போது `திருமாவின் துணிச்சல்’ என்று விகடனிலும் எழுதினார்கள். தலித் அல்லாதவர்களும் இந்த இயக்கத்தில் ஜனநாயக சக்திகளாகத் தங்களை இணைத்துக்கொண்டு, இது அனைவருக்குமான இயக்கம் என்கிற அங்கீகாரத்தை பெற்றிருக்கிறோம். உதயசூரியனின் துணையோடுதான் இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறோம். தேர்தலிலேயே நிற்காத ஒருவரைத் தூக்கிக் கொண்டாடுகிறார்கள். `அடுத்து அவர்தான் முதலமைச்சர்’ என்கிறார்கள். இதுதான் அரசியல், இது தான் ஊடகம். ஏதோ தனியார் சர்வே நடத்தினார்களாம். இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டாராம். அடுத்து அவர் தான் ஆட்சியைப் பிடிக்கப்போகிறாராம். பாவம், வேண்டுமென்றே அவரை உசுப்பிவிடுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

`2026 தேர்தலில் இரண்டுப் பேருக்கிடையில்தான் போட்டி. ஒருப்பக்கம் டி.எம்.கே. இன்னொரு பக்கம் டி.வி.கே’ என்று சொல்கிறார். `எடப்பாடி பழனிசாமி அவர்களே, நீங்கள் போட்டியில் இல்லை. உங்களை விட நாங்கள்தான் பெரிய சக்தி’ என்று அவர் சொல்ல வருகிறார். போட்டி தி.மு.க-வுடன் கிடையாது. இரண்டாவது இடம் யார் என்பதில்தான் விஜய்க்கும், எடப்பாடிக்கும் இடையிலான போட்டி. இரண்டாவது இடம் யார் என்பதில்தான் அண்ணாமலைக்கும், விஜய்க்கும் இடையிலான போட்டி. தமிழக அரசியல் களத்தில் இரண்டாவது இடத்தை யார் பிடிப்பது? என்பதில்தான் விஜய்யுடன் அரசியல் சண்டை நடக்கிறது.

இவர்களால் தி.மு.க கூட்டணியுடன் மோத முடியாது. அ.தி.மு.க-வுக்கு விஜய் ஒரு நெருக்கடியைத் தருகிறார். அவர்களே ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள். `தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் முதன்மையாக இருக்கிறது. அதை எதிர்க்கிற வலு அ.தி.மு.க-வுக்கு இல்லை. பா.ஜ.க-வுக்கும் இல்லை. எங்களுக்குத்தான் இருக்கிறது’ என்று இன்னும் ஒரு வார்டு எலெக்‌ஷனில்கூட நிற்காத ஒரு கட்சி... 65 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கின்ற அ.தி.மு.க-வுக்கு சவால் விடுகிறது. தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்பது பலருக்கும் ஆசையாக இருக்கலாம். ஆனால், அது வெறும் தி.மு.க-வை மட்டும் வீழ்த்துவது என்று பொருளல்ல. தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வீழ்த்துவோம் என்று சொல்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் இருக்கிறவரை எந்தக் கொம்பனாலும் தி.மு.க கூட்டணியை வீழ்த்த முடியாது என்பதை உறுதியோடு சொல்லிக்கொள்கிறேன். தி.மு.க கூட்டணியில்தான் வி.சி.க தொடரும்’’ என்றார் திருமாவளவன்.

`வெறுப்பை உமிழ்வதற்கல்ல சினிமா' - மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறை சீண்டும் கேரள சினிமாக்காரர்கள்

தற்போது, திரையில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள சினிமாவான ‘எம்புரான்’ படத்துக்கு, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் என்று காவிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 'கோத்ரா கலவரப் பின்னணியைக் காட்டியுள... மேலும் பார்க்க

'என் அப்பா பணத்தை தவறான வழியில்...' - ஆதவ் அர்ஜூனா மீது லாட்டரி மார்ட்டின் மகன் கடும் விமர்சனம்

பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். விசிக திமுக கூட்டணியில் இருந்தபோதும் ஆதவ் அர்ஜூனா திமுக மீது தொடர்ந்து பல்வேற... மேலும் பார்க்க

`ஓய்வு குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி?’ - பரவும் தகவலின் பின்னணி

பிரதமராக நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு கடந்த 10 ஆண்டில் ஒரு முறை கூட ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகத்துக்கு சென்றது கிடையாது. தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.. பா.ஜ.கவின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுப... மேலும் பார்க்க

"ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்திருக்கு..! " - கேள்வி எழுப்பும் அன்புமணி ராமதாஸ்

சீன கார் நிறுவனத்தின் ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழக அரசு இழந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து அன்புமணி ராமதாஸ், " சீனாவைச் சேர்ந்த மின்சார மகிழ... மேலும் பார்க்க

`நீட் ரகசியம் கேட்டால், உசேன் போல்டை விட வேகமாக ஓடுகிறார் உதயநிதி’ - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மதுரை திருமங்கலம் ஒன்றியத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தமிழக முழுவதும் 234 தொகுதிகளில் 68,500 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் பூத... மேலும் பார்க்க