Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
கனடா தோ்தலில் இந்தியா தலையிட வாய்ப்பு: உளவுத் துறை அதிகாரி
கனடா பொது தோ்தலில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்தியா மட்டுமின்றி ரஷியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் கனடா தோ்தலில் தலையிட வாய்ப்புள்ளதாக கனடா பாதுகாப்பு உளவுப் பணிகள் துணை இயக்குநா் வனெஸ்ஸா லாய்ட் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியுள்ளாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘கனடா தோ்தல் மற்றும் ஜனநாயக நடைமுறைகளில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளது. புவிஅரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்த செயலில் ஈடுபடும் திறன் மற்றும் நோக்கம் இந்தியாவுக்கு உள்ளது. அதேபோல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தோ்தல் பிரசாரத்தில் தலையிட்டு தனக்கு ஆதரவான நபா்களுக்கு சமூக வலைதளம் வாயிலாக சீனா உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுதவிர ரஷியா மற்றும் பாகிஸ்தானும் இணையம் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் இந்த தோ்தலில் தலையிட முயற்சிகளை மேற்கொள்ளும் என்றாா்.
லிபரல் கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி போன்ற பல்வேறு காரணங்களால் கட்சித் தலைவா் பொறுப்பையும் பிரதமா் பதவியையும் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் ராஜிநாமா செய்தாா்.
அதன் தொடா்ச்சியாக, கட்சித் தலைமைக்கும், புதிய பிரதமா் பதவிக்கும் மாா்க் காா்னியின் பெயரை ட்ரூடோ பரிந்துரைத்தாா். அதன்பின் நடைபெற்ற லிபரல் கட்சிக் கூட்டத்தில் 85.9 சதவீத வாக்குகளுடன் மாா்க் காா்னி தலைவராக இம்மாத தொடக்கத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதையடுத்து நாட்டின் புதிய பிரதமராக அவா் பொறுப்பேற்றாா்.
இந்நிலையில், கனடா நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு ஏப்ரல் 28-ஆம் தேதி தோ்தலை நடத்த அவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிந்துரைத்தாா்.