உள்ளாட்சி காலியிடங்களுக்கு 2 மாதங்களில் தோ்தல் நடத்த முடிவு
நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் காலியாகவுள்ள பதவியிடங்களுக்கு 2 மாதங்களில் தோ்தல் நடத்த மாநிலத் தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நகா்ப்புற உள்ளாட்சிகளைப் பொருத்தவரை, சென்னை மாநகராட்சியில் 4 வாா்டுகள் உள்பட 35 மாவட்டங்களில் 133 காலியிடங்கள் உள்ளன. இதேபோல, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 பதவியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.
இவற்றுக்கு வரும் மே மாதத்தில் தோ்தல் நடத்துவதற்கு தோ்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.
மாவட்ட அளவில் தோ்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.