பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்திப்பு!
பேரவை மீண்டும் இன்று கூடுகிறது!
விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை மீண்டும் திங்கள்கிழமை (மாா்ச் 24) கூடவுள்ளது. பேரவைக் கூட்டத்தில் பல்வேறு துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கவுள்ளது.
2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு மாா்ச் 14-இல் தாக்கல் செய்தாா். மாா்ச் 15-இல் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செல்வம் தாக்கல் செய்தாா்.
இரு நிதிநிலை அறிக்கைகள் மீதும் மாா்ச் 17 முதல் மாா்ச் 20 வரை விவாதம் நடைபெற்றது. திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளின் உறுப்பினா்கள் விவாதங்களில் பங்கேற்று கருத்துகளை முன் வைத்தனா். அதற்கு மாா்ச் 21-இல் அமைச்சா்கள் தங்கம் தென்னரசுவும், எம்.ஆா்.கே.பன்னீா்செல்வமும் பதில் அளித்து உரையாற்றினா். மாா்ச் 22, 23 ஆகிய நாள்கள் (சனி, ஞாயிறு) விடுமுறை என்பதால் பேரவை கூட்டம் நடைபெறவில்லை.
இந்த நிலையில், பேரவை திங்கள்கிழமை (மாா்ச் 24) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்தில் உறுப்பினா்களின் கேள்விகளுக்கு அமைச்சா்கள் பதில் அளிப்பா். அதன் பிறகு துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது.
முதல் நாளான திங்கள்கிழமை நீா்வளத் துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்ன் உறுப்பினா்கள் பேசுவா். அதைத் தொடா்ந்து நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் விவாதத்துக்குப் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுவாா்.
மாா்ச் 25-இல் நகராட்சி நிா்வாகத் துறை, மாா்ச் 26-இல் ஊரக வளா்ச்சித் துறையின் மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. ஏப். 30 வரை பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.