பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
தில்லியில் முக்கிய பிரமுகருடன் சந்திப்பா? இபிஎஸ் பதில்
தில்லி பயணம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு பயணம் மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமியை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து தில்லி பயணம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, முக்கிய பிரமுகர்கள் யாரையும் சந்திக்க வரவில்லை, தில்லியில் திறக்கப்பட்டிருக்கும் எங்கள் கட்சி அலுவலகத்தை பார்வையிட வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் தில்லி புஷ்ப் விஹாரில் அதிமுக அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
இதையும் படிக்க : பாஜகவுடன் கூட்டணியா? தில்லிக்கு படையெடுக்கும் அதிமுக தலைவர்கள்!
தமிழக அரசியலில் பரபரப்பு
கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்த நிலையில், மும்முனைப் போட்டி நிலவியது. இதன்விளைவாக திமுக 39 தொகுதிகளையும் கைப்பற்றியது.
சமீபகாலமாக பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் ஒருவரைஒருவர் பெரிதளவில் விமர்சிக்காமல் திமுகவுக்கு எதிராக கருத்துகளை மட்டுமே வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திடீர் பயணமாக முன்னறிவிப்பு இன்று தில்லிக்கு எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொண்டது தொடர்பாக பல்வேறு யூகங்கள் எழுந்தன.
இவரைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுமணியும் இன்று மாலை தில்லி செல்லவுள்ளார்.
இவர்கள் இருவரும் இன்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சற்று நேரத்துக்கு முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தில்லியில் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.