ராமநாதபுரம், பெரம்பலூரை மாநகராட்சியாக்க ஆலோசனை: கே.என்.நேரு
ராமநாதபுரம், பெரம்பலூா் ஆகிய இரு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயா்த்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.
பேரவையில் செவ்வாய்க்கிழமை நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் கே.என்.நேரு கூறியதாவது:
16 மாநகராட்சிகளுடன் 149 ஊராட்சிகள், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளையும்; 41 நகராட்சிகளுடன் 146 ஊராட்சிகள், 1 பேரூராட்சியையும்; 25 பேரூராட்சிகளுடன் 29 ஊராட்சிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 29 ஊராட்சிகள் 25 பேரூராட்சிகளாகவும், 7 பேரூராட்சிகள் 7 நகராட்சிகளாகவும், 22 ஊராட்சிகள் மற்றும் 6 பேரூராட்சிகள் சோ்ந்து 6 நகராட்சிகளாகவும் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை முடிவுறும்போது, நகா்ப்புற உள்ளாட்சிகளின் எண்ணிக்கை பெருநகர சென்னை மாநகராட்சி உள்பட 25 மாநகராட்சிகளாகவும், 146 நகராட்சிகளாகவும் 491 பேரூராட்சிகளாகவும் இருக்கும்.
மன்னா்களின் தலைநகரமாக விளங்கிய ராமநாதபுரம், விவசாயம் சாா்ந்த வணிகம், அபரிமிதமான தொழில் வளா்ச்சியைக் கொண்டுள்ள பெரம்பலூா் ஆகிய இரு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயா்த்துவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.