பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
மொழிக்கு எதிரானவர்கள் அல்ல, இரு மொழிகளே போதும் என்பவர்கள்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாம்; இந்த இரு மொழிகளே போதும் என்று சொல்பவர்கள்தான் நாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில், இருமொழிக் கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றினார்.
இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில், தமிழ்நாட்டு மக்களின் உயிர்நிறைக் கொள்கையான இருமொழிக் கொள்கை குறித்து மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளோடு தமிழ்நாடு அரசும் முழுமையாக உடன்படுகிறது என்பதை இந்த மாமன்றத்தில் நான் மீண்டும் உறுதி செய்கிறேன்.
தமிழும் ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. இது மொழிக் கொள்கை மட்டுமல்ல; நமது வழிக் கொள்கையும் - விழிக் கொள்கையும் இதுதான்!
எந்தப் பழிச்சொல் சொன்னாலும், இந்த உயிர்க் கொள்கையில் விட்டுத் தர மாட்டோம்; விட்டு விலக மாட்டோம் என்பதை இம்மாமன்றத்தில் உறுதியாக மீண்டும் மீண்டும் நான் பதிவு செய்கிறேன். இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும்; பணமே வேண்டாம் - தமிழ்மொழி காப்போம் என்ற அந்த உறுதியை நான் பல்லாயிரக்கணக்கான ஆசிரியப் பெருமக்கள் முன்னிலையில் விருத்தாசலத்தில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன்.
இரண்டாயிரம் கோடி என்ன? பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழித் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று குறிப்பிட்டேன். மீண்டும் சொல்கிறேன், இது பணப்பிரச்சினை அல்ல; நம் இனப்பிரச்சினை! நம் தமிழை, தமிழினத்தை, தமிழ்நாட்டு மாணவக் கண்மணிகளை, இளைய சமுதாயத்தைக் காக்கும் பிரச்சினை!
அவர்கள் நிதி தரவில்லை என்பதற்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமை அல்ல நாங்கள். தடைக்கற்கள் உண்டு என்றால், அதை உடைத்து எரியும் தடந்தோள்கள் உண்டென்று என்று சொல்லும் திராவிட மாடல் ஆட்சி இது. இந்த ஆட்சியில், சமூகநீதியும் தமிழ்மொழிக் காப்பும் இருகண்கள்! இதே மாமன்றத்தில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 23.1.1968 அன்று இருமொழிக் கொள்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
1. மத்திய அரசின் இந்தித் திணிப்புத் திட்டத்தை இந்த மன்றம் ஏற்க மறுக்கிறது.
2. மத்திய அரசின் திட்டத்தை ஏற்க மறுக்கும் வகையிலும், மாணவர் எண்ணத்துக்கு மதிப்பளிக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையே செயல்பாட்டில் இருக்கும்.
இது தமிழ்நாட்டுக்கு பேரறிஞர் அண்ணா அளித்த மாபெரும் கொடை!
இது கொள்கை மட்டுமல்ல; தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சட்டம்!
தாய் நிலத்துக்கு தமிழும் - உலகத் தொடர்புக்கு ஆங்கிலமும் என்று அண்ணா வடித்த சட்டம் அது. தமிழிலும் ஆங்கிலத்திலும் கரைகண்ட அவர் வடித்துக் கொடுத்தசட்டம் அது. இந்த இருமொழிக் கொள்கைதான் அரைநூற்றாண்டு காலமாக நம் தமிழ்நாட்டை வளர்த்து வந்துள்ளது.
உலகளாவிய பரப்பில் நமது தமிழ் மக்கள் வாழவும், ஆளுமை செலுத்தவும், உயர்த்தவும், உன்னதமான உயரத்தை அடையவும் வழிவகுத்த கொள்கை இந்த இருமொழிக் கொள்கைதான். எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாம்; இந்த இரு மொழிகளே போதும் என்று சொல்பவர்கள் நாம்.
மொழிக் கொள்கையில் தமிழ்நாடு வகுத்துள்ள பாதையும், அதன் உறுதியான நிலைப்பாடுமே சரி என்பதை நமது அண்டை மாநிலங்கள் தொடங்கி, இந்தியாவின் பல மாநிலங்களும் இப்போது உணர்ந்து வருவதைப் பார்க்கிறோம்.
இன்னொரு மொழியைத் திணிக்க அனுமதித்தால், அது நம் மொழியை மென்று தின்று விடும் என்பதை நாம் வரலாற்றுப் பூர்வமாக உணர்ந்தவர்கள் என்ற அடிப்படையில்தான் இருமொழிக் கொள்கையை சிக்கெனப் பிடிக்கிறோம்.
இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைக் காக்கவும் - மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச்சரியான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ்மொழியையும் காக்க முடியும், தமிழினத்தையும் உயர்த்த முடியும் என்பதை உறுதிபடத் தெரிவித்து, அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றும் அறிவித்து இந்தளவில் என்னுடைய விளக்கத்தை நிறைவு செய்கிறேன் என்றார்.