Vignesh Puthur: `ஆலப்புழா டு தென்னாப்பிரிக்கா' - விக்னேஷை மும்பை அணி எப்படி கண்டுபிடித்தது தெரியுமா?
சேப்பாக்கத்தில் சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோற்றிருக்கிறது. ஆனாலும் மும்பை அணியின் விக்னேஷ் புத்தூர் எனும் இளம் வீரர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். அறிமுகப் போட்டியிலேயே ருத்துராஜ், சிவம் துபே, தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இப்படியொரு இளம் வீரரை மும்பை அணி தங்கள் அணிக்குக் கொண்டு வந்தது ஒரு சுவாரஸ்ய கதை.

ஐ.பி.எல் இரண்டு மாதங்கள்தான் நடக்கிறது. ஆனால், ஐ.பி.எல் அணிகள் ஆண்டு முழுவதுமே தங்கள் அணிகளுக்கு புதிய வீரர்களை எடுக்க உலகம் முழுவதும் பயணித்து 'Scouting' பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இளம் வீரர்களை கண்டடைந்து அவர்களை வளர்த்தெடுப்பதில் மும்பை இந்தியன்ஸ் அணி கெட்டிக்காரர்கள். ஜான் ரைட் மும்பை அணியின் Scouting குழுவில் பொறுப்பில் இருந்தபோதுதான் உள்ளூர் போட்டியிலிருந்து பும்ராவை கண்டுபிடித்து வாய்ப்பு கொடுத்து வளர்த்தெடுத்தனர். அதேமாதிரிதான் விக்னேஷையும் கண்டுபிடித்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் நடக்கும் TNPL தொடரைப் போல கேரளாவிலும் கேரளா ப்ரீமியர் லீக் நடக்கிறது. அங்கே ஆலப்புழா என்கிற அணிக்காகத்தான் விக்னேஷ் புத்தூர் ஆடி வந்திருக்கிறார். அங்கே மும்பையின் Scouting குழு அவரைக் கண்டடைந்து ட்ரையல்ஸூக்கு அழைக்கின்றனர். அதிலும் சிறப்பாகச் செயல்படவே, தென்னாப்பிரிக்காவில் நடக்கும் SAT20 தொடரில் ஆடும் மும்பை அணிக்காக நெட் பௌலராக அழைத்துச் சென்றனர். அதன்பிறகுதான் 30 லட்ச ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்தனர்.

விக்னேஷ் குறித்து மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே பத்திரிகையாளர்களிடம் சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார். அவர் பேசியதாவது, ``எங்களின் மும்பை அணியின் Scouting குழுவுக்குத்தான் அத்தனை பாராட்டுகளும் செல்லவேண்டும். நாங்கள் ஒரு வீரரைத் தேர்வுசெய்கையில் அவரின் திறமையை மட்டும்தான் பார்ப்போம். வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்கமாட்டோம். விக்னேஷூம் ட்ரையல்ஸூக்காக வந்திருந்தார். நாங்கள் அவரின் திறனை மட்டும்தான் பார்த்தோம். அவர் எத்தனை போட்டிகளில் ஆடியிருக்கிறார், என்ன செய்திருக்கிறார் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. அவரும் இன்று சிறப்பாக ஆடிவிட்டார்.
சென்னைக்கு எதிராக ஒரு போட்டியில் ஆடுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால், விக்னேஷ் அந்த அழுத்தத்தையெல்லாம் சிறப்பாகக் கையாண்டுவிட்டார். எங்களின் வலைப்பயிற்சியில் ரோஹித், சூர்யா, திலக் போன்ற வீரர்களாலயே விக்னேஷை எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவரை இந்தப் போட்டியில் இறக்கலாம் என முடிவெடுத்தோம். அது சரியான முடிவாகிவிட்டது. மஹிலா ஜெயவர்த்தனே, பொல்லார்ட், ரோஹித், சூர்யா போன்றவர்களுடன் விக்னேஷூக்கு உரையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன்மூலம் அணிக்கு என்ன தேவை என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.
இப்போது அவர் ஒரு பஞ்சை போன்ற நிலையில் இருக்கிறார். எல்லாவற்றையும் கவனித்து உட்கிரத்துக் கொள்கிறார். அவர் இதுவரை டிவியில் பார்த்த வீரர்கள் இப்போது ட்ரெஸ்ஸிங் ரூமில் அவருக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள். இதெல்லாம் அவருக்கு கனவு நனவானதைப் போல இருக்கும் என நினைக்கிறேன்.' என்றார்.
விக்னேஷ் புத்தூரை பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.