IPL: ஆர்ச்சரை இனரீதியாக விமர்சித்த ஹர்பஜன்; வெடித்த சர்ச்சை... சாடும் கிரிக்கெட் ரசிகர்கள்!
ஐபிஎல் 18 வது சீசனின் இரண்டாவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே மார்ச் 23-ம் தேதி ஹைதராபாத்தில் மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 14.1 ஓவர்களில் 200 ரன்களை தொட்டு, ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 200 ரன்கள் அடித்த அணி என்ற பெங்களுருவின் சாதனையைச் சமன் செய்தது.

இறுதியில், இஷான் கிஷனின் சதம் உட்பட பேட்டிங் இறங்கிய அனைவரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் ஐபிஎல்லின் அதிகபட்ச ஸ் கோராக 287 ரன்களைக் குவித்தது ஹைதராபாத்.
இதில், ராஜஸ்தான் அணியால் ரூ. 12.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 76 ரன்களை வாரிக்கொடுத்து, ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்களைக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையைப் பதிவு செய்தார்.
அதைத்தொடர்ந்து கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் குவித்து 44 ரன்கள் வித்தியாசத்தில் போராடித் தோற்றது.
இந்த நிலையில், இப்போட்டியின் போது வர்ணனையிலிருந்த இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ஆர்ச்சரின் நிறத்தை வைத்து அவரை இன ரீதியாக விமர்சித்தது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

ஏற்கெனவே, 2008-ல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரின்போது ஆன்ரூ சைமன்ட்ஸ் மீது வார்த்தைகளால் ஹர்பஜன் இனவெறி தாக்குதலில் ஈடுபட்டதாக விசாரணைக்குள்ளாகியிருந்தார்.
இப்போது, ஆர்ச்சரை இனரீதியாக ஹர்பஜன் விமர்சித்திருக்கிறார். இதனால், சமூக வலைதளங்களில் ஹர்பஜனைக் கடுமையாக விமர்சித்துவரும் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை வர்ணனையாளர் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.