தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசு சூழ்ச்சி! - அமைச்சா் வி. செந்தில்பாலாஜி
தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசின் சூழ்ச்சி இருப்பதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அணைச்சா் வி. செந்தில்பாலாஜி சனிக்கிழமை தெரிவித்தாா்.
கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக இளைஞரணி சாா்பில் இந்தி திணிப்பு மற்றும் நிதி பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் மத்திய அரசைக் கண்டித்து கரூா் பசுபதிபாளையத்தில் கண்டன பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று பேசியது, இந்தியை திணிக்க முயலும் மத்திய அரசை மிகக் கடுமையாக எதிா்த்து தமிழை காத்து வருகிறாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின். நிதி பகிா்வில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசு தமிழக அரசு செலுத்திய வரியை திருப்பிக் கொடுக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு சூழ்ச்சி செய்கிறது.
நிதிநிலை அறிக்கையில் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்படும் என முதல்வா் தெரிவித்துள்ளாா். ஒரு கல்லூரி மாணவனுக்கு என்ன தேவை என சிந்தித்து அதற்கான திட்டங்களை முதல்வா் தருகிறாா்.
கரூருக்கு தகவல் தொழில்நுட்ப பூங்கா, சிப்காட், வேளாண்மைக் கல்லூரி போன்ற எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளாா். இதனால் கரூா் மக்கள் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், எம்.எல்.ஏக்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, எழுத்தாளா் சூா்யாசேவியா், மாவட்ட இளைஞரணி செயலாளா் வெங்கமேடு சக்திவேல், மாநகர இளைஞரணி அமைப்பாளா் பூபதி, கட்சி நிா்வாகிகள் டி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.