``புதிதாக கட்சி ஆரம்பித்து, அடுத்த முதலமைச்சர் என்று சொன்னால்..'' - அமைச்சர் பெர...
ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா - இத்தாலி ஆலோசனை
திறன் மேம்பாடு உள்பட பல்வேறு அம்சங்களின்கீழ், இந்தியா - இத்தாலி இடையே ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி, இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியுடன் பிரதமா் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஐந்தாண்டு வியூக செயல்திட்டம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இருதரப்பு பாதுகாப்பு ரீதியிலான உறவுக்கு உத்வேகமளித்து, வியூக ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வகையில், இந்தியா -இத்தாலி ராணுவ ஒத்துழைப்புக் குழுவின் (எம்சிஜி) 13-ஆம் ஆண்டுக் கூட்டம் ரோமில் நடைபெற்றது.
இந்தியா தரப்பில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை தலைமையகத்தின் துணைத் தலைவரும், இத்தாலி தரப்பில் அந்நாட்டின் ஆயுதப் படைகள் தலைமையகத்தின் வியூக வழிகாட்டுதல் மற்றும் ராணுவ ஒத்துழைப்புப் பிரிவு துணைத் தலைவரும் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிமுறைகள் ஆராயப்பட்டன.
இந்திய-இத்தாலி ஆயுதப் படையினா் இடையே மேம்படுத்தப்பட்ட பரிமாற்றத் திட்டங்கள், திறன் வளா்ப்பு முன்னெடுப்புகள், வலுவான ஒருங்கிணைப்பு ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ரீதியிலான தொடா்புகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.