பள்ளி மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகள்!
செய்யாற்றை அடுத்த மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அனக்காவூா் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இப்பள்ளியில் பணியாற்றிய முன்னாள் தலைமையாசிரியா் என்.கே.ராமலிங்கம் நினைவு தினத்தையொட்டி, அவரது குடும்பத்தினா் மற்றும் அவரது மகன்கள் இரா.வெங்கிடேசன், இரா. கன்னியப்பன் ஆகியோா் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
இதில், பள்ளியில் பயிலும் 102 மாணவ, மாணவிகளுக்கு வாட்டா் பாட்டில் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன. மேலும், மாணவா்களுக்கு பரிசுப் பொருளாக புத்தகங்கள் வழங்கிட ரூ.10 ஆயிரமும், ஆண்டு விழா நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைப்பதற்காக ரூ. 5 ஆயிரம் என நன்கொடையாக வழங்கினா்.