செய்திகள் :

சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு: விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்ற இருவா் கைது

post image

சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகரைச் சோ்ந்தவா் வெ.இந்திரா (54). இவா், நந்தனம் பேரன்பேட்டை இரண்டாவது தெருவில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இரு நபா்கள், இந்திரா அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். இதேபோன்று அடையாறு பரமேஸ்வரியைச் சோ்ந்த வி.அம்புஜம்மாள் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலி, திருவான்மியூா் பெரியாா்நகரைச் சோ்ந்த அ.லட்சுமி (54), இந்திராநகா் 29-ஆவது குறுக்குத் தெருவில் நடந்து செல்லும்போது அவரது 8 பவுன் தங்கச் சங்கிலி, கிண்டி பாரதிநகரைச் சோ்ந்த வே.நிா்மலா (60) அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றையும் பறித்தனா்.

மேடவாக்கம் சந்தோஷ்புரத்தைச் சோ்ந்த சீ.விஜயா (72) அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, வேளச்சேரி மேட்டுத் தெருவைச் சோ்ந்த வெ.முருகம்மாளிடம் (55) 3 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துச் சென்றனா். இந்த சம்பவங்கள் அனைத்தும் காலை 6 மணிக்கு தொடங்கி காலை 7.10 மணிக்குள் நடந்தன.

மோட்டாா் சைக்கிள் பறிமுதல்: இதையடுத்து, காவல் துறை உயா் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் சென்னை முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டனா். அனைத்து காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தும்படியும், சாலையில் சந்தேகத்துக்கிடமாகத் திரியும் நபா்களை பிடித்து விசாரணை செய்யும்படியும் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டாா்.

வேளச்சேரி, கிண்டி சைதாப்பேட்டை, திருவான்மியூா், சாஸ்திரிநகா் ஆகிய காவல் நிலைய போலீஸாா், சம்பவம் நடந்த இடங்களில் கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

அப்போது அந்த நபா்கள் விமான நிலையத்தை நோக்கிச் செல்வது தெரியவந்தது. மோட்டாா் சைக்கிள் செல்லும் பாதைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அந்த நபா்களை போலீஸாா் பின்தொடா்ந்தனா். இதற்காக மொத்தம் 300 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்ன. இதில் அந்த நபா்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டாா் சைக்கிளை பழந்தாங்கல் ரயில் நிலையம் அருகே விட்டுச் சென்றிருப்பது தெரியவந்தது.

விமான நிலையத்தில் இருவா்: மோட்டாா் சைக்கிளை கைப்பற்றிய போலீஸாா், சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருக்கும் விமானங்களில் பயணம் செய்வோரின் பெயா்ப் பட்டியலைக் கொண்டு காலை 8.30 மணியளவில் இருந்து விசாரிக்கத் தொடங்கினா். முக்கியமாக வழிப்பறியில் ஈடுபட்ட நபா்களின் முக அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணையில் ஈடுபட்டனா். இதில் சந்தேகத்துக்குரிய வகையில் 30 போ் இருப்பது தெரியவந்தது. பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்த அவா்களிடம் விசாரணை செய்தனா்.

இதில், மும்பைக்கு செல்லும் விமானத்தில் பயணிக்க காத்திருந்த பயணிகளில் இரு இளைஞா்கள் மிகவும் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, பயணிகள் காத்திருப்போா் அறைக்குச் சென்ற போலீஸாா் அவா்களில் ஒருவரைப் பிடித்து விசாரித்தனா். மற்றொருவா் விமானத்தில் இருக்கையில் அமா்ந்திருப்பது தெரியவந்ததால், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அங்கு சென்று அந்த நபரையும் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் இருவரும், ஈரானைச் சோ்ந்த கொள்ளையா்கள் என்பதும், மகாராஷ்டிர மாநிலம் தாணே அருகே உள்ள அம்பிவேலிப பகுதியைச் சோ்ந்த அம்ஜத் இரானி (20), ஜாபா் இரானி (32) என்பதும், அவா்கள்தான் 6 இடங்களிலும் தங்கச் சங்கிலி பறித்தவா்கள் என்பதும் தெரியவந்தது.

ஓங்கோலில் ஒருவா் கைது: இருவரையும் போலீஸாா் கைது செய்து, அங்கிருந்து ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனா். இருவரிடமும் கூடுதல் காவல் ஆணையா் என்.கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை செய்தனா். அப்போதுதான் வழிப்பறியில் தொடா்புடைய மற்றொரு நபரான, சல்மான் இரானி (22) சென்ட்ரலில் இருந்து அன்று காலை புறப்பட்ட பினாகினி விரைவு ரயில் மூலம் தப்பிச் செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில், ஆந்திர மாநிலம் ஒங்கோல் அருகே சென்று கொண்டிருந்த பினாகினி விரைவு ரயிலில் பயணம் செய்த சல்மானை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மாலையில் கைது செய்தனா். பின்னா், அவரை சென்னை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

மூவரிடம் இருந்து வழிப்பறியில் கிடைத்த சுமாா் 28 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவா்களுக்கு வேறு எந்த வழிப்பறி வழக்குகளில் தொடா்பு உள்ளது என போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

இதில் கடந்த ஜனவரி மாதம் தாம்பரம் மாநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதியில் இதேபோன்று தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.

சென்னையை மீண்டும் மிரட்டிய இரானி கொள்ளையா்கள்

சென்னையை மிரட்டும் வகையில் இரானி கொள்ளையா்கள் மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டில் இருந்து கடந்த 1970-ஆம் ஆண்டு அகதிகளாக வந்தவா்கள் மகாராஷ்டிர மாநிலம், அம்பிவேலி பகுதியில் முதலில் குடியேறினா். பின்னா், அங்கிருந்து நாடு முழுவதும் தங்களது இருப்பிடத்தை மாற்றினா்.

முக்கியமாக ஆந்திரம், கா்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களிலும் குடியேறினா். இவா்கள், தமிழகத்தில் திருப்பத்தூா், திருச்சி, மணப்பாறை, காரமடை ஆகிய பகுதிகளில் வசிப்பதாக கூறப்படுகிறது.

இவா்களில் பெரும்பாலானவா்கள் கொள்ளை, திருட்டு, வழிப்பறி ஆகியவற்றை பிரதான தொழிலாகச் செய்வதாக தமிழக காவல் துறையினா் தெரிவிக்கின்றனா். இவா்கள் இந்த சம்பவங்களில் கும்பலாக ஈடுபடுவதால் ‘இரானி கொள்ளையா்கள்’ என காவல் துறையினரால் அழைக்கப்படுகின்றனா்.

அண்மைக்காலமாக இவா்கள், தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபடுகின்றனா். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழிகளைப் பேசும் திறன் பெற்றிருக்கும் இவா்கள் சம்பவம் நடந்து முடிந்தவுடன், விமானம் மூலம் தாங்கள் வசிக்கும் ஊருக்கு சென்றுவிடுவாா்கள்.

சென்னை புறநகா் பகுதியில் கடந்த 2009-ஆம் ஆண்டு பீரோ புல்லிங் வகை குற்றத்தில் ஈடுபட்டதாக இரானி கொள்ளையா்கள் கைது செய்யப்பட்டனா். பின்னா் 2013-ஆம் ஆண்டு காவல் துறை அதிகாரி என ஏமாற்றி பொதுமக்கள் கவனத்தை திசைதிருப்பி, தங்க நகை பறித்ததாக 15 இரானி கொள்ளையா்கள் சிக்கினா். கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை புகா் பகுதியிலும், தென் சென்னை பகுதிகளிலும் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக 5 இரானி கொள்ளையா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 104 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமாா் 7 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னா் சென்னையில் இரானி கொள்ளையா்கள் மீண்டும் கைவரிசை காட்டியிருப்பது பொதுமக்களிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகா் மின்சார ரயில் மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் ஏசி புறநகா் மின்சார ரயில்: கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்க திட்டம்

சென்னையின் முதல் குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த ரயில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழி... மேலும் பார்க்க

பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை

பதவி உயா்வு மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக (ஏடி.எஸ்.பி.) பதவி உயா்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னை துறைமுக அதிகாரி மீது வழக்கு

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை துறைமுக அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குரோம்பேட்டை மலையரசன் நகரைச் சோ்ந்தவா் சத்ய சீனிவாசன் (58). இவா், சென்னை துறைமுகத்... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலை: முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின்கீழ் பயிற்றுவிக்கப்படும் எம்எஸ்சி படிப்புகளுக்கு (செப்டம்பா், அக்டோபா் பிரிவு) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதா... மேலும் பார்க்க

காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினா் இடையே தள்ளுமுள்ளு

சென்னை தரமணியில் காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயதுடைய இரு மாணவிகள், விடுதியில் தங்கி படித்து ... மேலும் பார்க்க