பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
லஞ்ச வழக்கில் சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
சான்றொப்பமிட்ட பத்திர நகல் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில், சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி அசோகன். இவா் தனது சொத்து பத்திரத்தின் சான்றொப்பமிட்ட நகல் வேண்டி கடந்த 2012- ஆம் ஆண்டு டிச.18- ஆம் தேதி நாகா்கோவில் இடலாக்குடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் மனு அளித்தாா். மேற்படி நகல் வழங்குவதற்கு, சாா் பதிவாளராக பணியாற்றிய சுயம்புலிங்கம் (68), ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நாகா்கோவில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
இது தொடா்பான வழக்கு நாகா்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், குற்றம் சாட்டப்பட்ட சுயம்புலிங்கத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு கூறினாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் கண்ணன் ஆஜரானாா்.