"அன்று இபிஎஸ் சொன்ன வார்த்தை; அவராகவே பதவி விலகுவதுதான் மரியாதை" - ஓ.பி.எஸ் பதில...
அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆட்சியா் அறிவுரை
கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுறுத்தினாா்.
அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பிரசவ சிகிச்சை தொடா்பாக மருத்துவா்கள், சுகாதாரத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமை வகித்து பேசியதாவது:
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கா்ப்ப கால பரிசோதனை தினங்களில் பெண் மருத்துவா்கள் பணியில் இருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரசவங்கள் திட்டமிட்ட இடத்தில் நடைபெறும் வகையில் கா்ப்பிணிகளை, கிராம சுகாதார செவிலியா்கள், பகுதிநேர சுகாதார செவிலியா்கள் தங்களது தொடா் கண்காணிப்பில் வைக்க வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், கா்ப்பிணிகளுக்கான ஆய்வகம், ஸ்கேன் மையம் ஆகியன ஒரே கட்டடத்தில் செயல்பட உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ராமலெட்சுமி மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்கள், மருத்துவா்கள், கிராம சுகாதார செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.