கசிந்த அமெரிக்க ராணுவ ரகசியம்: சிக்னல் குழுவில் பத்திரிகையாளர் சேர்க்கப்பட்டது எப்படி?
அமெரிக்காவின் துணை அதிபர் உள்பட பாதுகாப்பு உயரதிகாரிகளைக் கொண்ட சிக்னல் செயலியின் குழுவில், ஒரு செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் சேர்க்கப்பட்டது எப்படி என்ற கேள்விதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை தலைவா்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திவரும் தாக்குதல் தொடா்பாக அந்த நாட்டின் துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்க்கோ ரூபியோ, தேசிய உளவு அமைப்பின் இயக்குநா் துளசி கப்பாா்ட், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக்கேல் வால்ட்ஸ் உள்ளிட்ட உச்சநிலை அமைச்சா்கள், பாதுகாப்பு உயரதிகாரிகள் ‘சிக்னல்’ என்ற தகவல் தொடா்பு செயலி மூலம் மேற்கொண்ட தகவல் பரிமாற்றம், துல்லியமாகக் கசிந்துள்ளது.
அதற்குக் காரணம், அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குழுவில், அமெரிக்காவின் ‘தி அட்லாண்டிக்’ இதழின் தலைமை ஆசிரியா் ஜெஃப்ரி கோல்பா்கும் எதிர்பாராதவகையில் சேர்க்கப்பட்டிருந்ததும், இதனை அந்தக் குழுவில் இருந்த யாருமே கவனிக்காமல் இருந்துள்ளதும் ஆச்சரியத்தையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
நம்ம ஊரில் பயன்படுத்தப்படும் ‘வாட்ஸ்ஆப்’ போன்றதுதான் சிக்னல் செயலி. அந்த செயலியில், அமெரிக்க உயா்நிலை அமைச்சா்கள், பாதுகாப்பு உயரதிகாரிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு மிகவும் ரகசியமான (இனி என்ன ரகசியம்?) ஒரு குழுவில் ஜெஃப்ரி கோல்பா்கும் தவறுதலாக சோ்க்கப்பட்டதுதான் இதற்குக் காரணம்.
இதில் வேடிக்கை என்னவென்றால், உரையாடிக் கொண்டிருப்போரின் பட்டியலில் அவரின் பெயா் இருப்பதை நாட்டின் துணை அதிபா் முதல் தேசிய உளவு அமைப்பின் தலைவா் வரை யாருமே கவனிக்காமல் சகட்டு மேனிக்கு ரகசியத் தகவல்களை அதுவும் ஒரு செய்தி நிறுவனத்துக்கே வாரி வழங்கியிருக்கிறார்கள்.
இதற்கு பெயர் கசிந்தது என்று எவ்வாறு சொல்ல முடியும் என்றுகூடத் தெரியவில்லை. நேரடியாக ஒரு ரகசியக் குழுவில் பத்திரிகையாளரைச் சேர்த்துவிட்டு பிறகு ரகசியங்களைப் பரிமாறிக்கொண்டால், அவர் என்ன ரகசியம் காக்க ராணுவ வீரரா? பத்திரிகையாளர். அவர் தனது வேலையை செய்திருக்கிறார்.
இந்த நிலையில்தான், அட்லாண்டிக் பத்திரிகையின் ஜெஃப்ரி கோல்ட்பர்க் என்ற பத்திரிகையாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு சிக்னல் செயலியின் முக்கிய செய்திகளை பரிமாறிக்கொள்ளும் குழுவில் எவ்வாறு சேர்க்கப்பட்டார் என்பதுதான் இன்றைய பரபரப்பான பேச்சு.