மீனவர்கள் 11 பேர் கைது; இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தொடரும் சிறைபிடிப்பு!
பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியான மன்னார் வளைகுடா கடல் பரப்பில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து சிறை பிடித்து வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்னை என்றாலும், கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களும் அவர்களது படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் சிறைபிடிக்கப்படும் படகுகளை இலங்கை அரசு நாட்டுடமை ஆக்குவதுடன், கைது செய்யப்படும் மீனவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் அபராதமாகவும் விதிக்கப்படுகிறது. இலங்கை மீனவர்களின் அழுத்தத்தினால் இலங்கை இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் இரு நாட்டு மீனவர்களிடையே நிலவும் மீன்பிடி பிரச்னைக்கு சுமுக தீர்வு காணும் வகையில் இரு தரப்பு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மன்னார் மாவட்டம், வவுனியாவில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகிகள் சேசுராஜ், சகாயம், ஜஸ்டின், ஆல்வின் உள்ளிட்டோர்... இலங்கை மீனவர் சங்க நிர்வாகிகள் வர்ணகுல சிங்கம், அன்னராசா, ஜோசப் பிரான்சிஸ், ஆலன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு தரப்பு மீனவர்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து பேசப்பட்டதுடன் அடுத்த கட்டமாக இரு நாட்டு அதிகாரிகள் முன்னிலையில் மீனவர்கள் சமாதான கூட்டம் நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.



இதனிடையே ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற ஜெர்சிஸ் என்பவரது படகினை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், அதில் மீன்பிடிக்க சென்ற பாக்கியராஜ், சவேரியார் அடிமை, முத்து களஞ்சியம், எபிரோன், ரஞ்சித், பாலா, யோவான்ஸ், இன்னாசி, ஆர்னாட், கிறிஸ்து, அந்தோணி ஆகிய 11 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஒரு புறம் இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடி பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மறுபுறம் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடித்திருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகள் முன்னிலையில் இரு தரப்பு மீனவர் பேச்சுவார்த்தை நடத்த விரைவாக ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.