Ajithkumar : `தல வர்றாரு!'; இட்லி கடை திரைப்படம் பற்றி சூசகமாகப் பதிவிட்ட அருண் ...
RTI: உள்ளே நுழையும் DPDP act பிரிவு 44 (3); பறிபோகும் ஆர்.டி. ஐ உரிமை... பிரச்னை என்ன? | Explainer
`மத்திய பட்ஜெட் - 2025' மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, வக்பு வாரிய விவகாரம் போன்ற விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றன. இச்சூழலில், எவ்வித சத்தமுமின்றி மற்றொரு பிரச்னை பூதாகரமாக உருவெடுத்து வருகிறது.
என்ன பிரச்னை?
பிரபல சமூக செயற்பாட்டாளர்கள் அருணா ராய், பிரசாந்த் பூஷன், அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள், 30-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் மார்ச் 21 அன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தன. அப்போது, ``தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) பிரிவு 8 (1) (j)-ல், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 44 (3) மூலம் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. இது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே பலவீனப்படுத்துகிறது. மத்திய அரசு உடனே அதை நீக்க வேண்டும்" என்று அவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், ``டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 44 (3) ஆனது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அழிக்கிறது. அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்'' என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு மார்ச் 23 அன்று கடிதம் எழுதினார்.
மறுபக்கம், சமூக ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் அடங்கிய குழு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து இதுபற்றி முறையிட்டனர். சந்திப்புக்குப் பின்னர் ராகுல் காந்தி, ``இந்தச் சட்டமானது, தனியுரிமையைப் பாதுகாத்தல் என்ற பெயரில், பொதுமக்களும் பத்திரிகையாளர்களும் அரசின் பொதுத் தகவல்களைப் பெறுவதற்கான சாத்தியங்களைக் குறைக்கிறது" என்று எச்சரித்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட பிரிவு 8 (1) (j) என்ன கூறுகிறது... DPDP-ன் பிரிவு 44 (3) என்ன திருத்தத்தைக் கொண்டுவருகிறது... என்ன பிரச்னையை மத்திய அரசு நுழைக்க பார்க்கிறது என்பதை விரிவாகக் காணலாம்.
ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களை நோக்கியும், மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசைப் பற்றியும், அதே வரிப்பணத்தில் சம்பளம் பெரும் அரசு அதிகாரிகளை நோக்கியும் அதிகாரப்பூர்வமாகக் கேள்வி கேட்க, மக்களுக்கு சட்டப்பூர்வ உரிமை வழங்குவதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
அரசாங்கம், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், அரசுத் துறைகள், அலுவலகங்கள் ஆகியவை, மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதும், மக்கள் கேட்கும் ஆவணங்களைக் கொடுப்பதும் கடமை என்ற அடிப்படையில், 2005-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஊழல்களை வெளிக் கொண்டுவருவது, அரசின் திட்டங்கள் தகுதியானவர்களைச் சென்றடைகிறதா என்பதைக் கண்காணிப்பது உள்ளிட்ட பல விவகாரங்களை மக்கள் நேரடியாக அறிந்துகொள்வதற்கு இந்தச் சட்டம் முக்கிய கருவியாக இருக்கிறது.
இருப்பினும், நாட்டின் நலனைப் முன்னிலைப்படுத்தி குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்வதற்கு இந்தச் சட்டத்தில் விதிவிலக்குகளும் இருக்கின்றன.
RTI சட்டப் பிரிவு 8 - தகவல் அளிப்பதிலிருந்து விதிவிலக்கு
உட்பிரிவு 1: இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும், மக்கள் எவருக்கும் பின்வரும் தகவலை அளிக்கும் பொறுப்பு எதுவும் இல்லை.
(a) இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, மூலோபாயம், நாட்டின் அறிவியல் அல்லது பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய (அ) குற்றச் செயல்களைத் தூண்டக்கூடிய தகவல்.
(b) நீதிமன்றத்தால் அல்லது தீர்ப்பாயத்தால் தடைசெய்யப்பட்ட தகவல்.
(c) நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்தின் சிறப்புரிமையை மீறக்கூடிய தகவல்.

(d) வர்த்தக ரகசியங்கள், அறிவுசார் சொத்துகள் (காப்புரிமை ஆவணங்கள் உள்ளிட்டவை) குறித்த தகவல்கள். (பொதுநலனுக்கு அவற்றைத் தெரிவிக்கவேண்டியது மிக முக்கியம் என்று அதற்கான அதிகார அமைப்பு உறுதிசெய்யாத வரை மட்டுமே விதிவிலக்கு பொருந்தும்.)
(e) அரசுடன் நம்பிக்கைக்குரிய தொடர்பில் உள்ளவரிடம் இருக்கும் தகவல். (சம்பந்தப்பட்ட அதிகார அமைப்பானது, இந்தத் தகவல் பொதுநலனுக்காகத் தெரிவிக்கவேண்டியது அவசியமானது என்று உறுதிசெய்யாத வரை மட்டுமே விதிவிலக்கு பொருந்தும்.)
(f) வெளிநாட்டு அரசிடமிருந்து பெறப்பட்ட ரகசியத் தகவல்.
(g) தகவல் அளித்தவரை அடையாளம் காணக்கூடிய, அவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, பாதுகாப்பை அச்சுறுத்தக்கூடியதாக இருக்கும் தகவல்.
(h) குற்றவாளிகள் மீதான விசாரணை அல்லது கைது நடவடிக்கை அல்லது வழக்கு ஆகியவற்றுக்குத் தடை ஏற்படுத்தும் தகவல்.

(i) அமைச்சர்கள், துறை செயலாளர்கள், அதிகாரிகளின் ஆலோசனைகள் உள்ளிட்ட அமைச்சரவை ஆவணங்கள்.
குறிப்பு 1 : ஒரு மசோதா அல்லது திட்டம் தொடர்பான வரைவு அறிக்கைகள் தயார்செய்வது உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிந்து அது நடைமுறைக்கு வந்த பின்பு அதுதொடர்பான ஆவணங்களைக் கேட்கும்பட்சத்தில் அதை மக்களுக்குத் தர மறுக்கக் கூடாது.
குறிப்பு 2 : அதேசமயம், குறிப்பு 1-ன் கீழ் வரும் ஆவணங்கள், மேற்குறிப்பிட்ட விதிவிலக்குகளுக்குள் வரும்பட்சத்தில் அவை மக்களுக்கு அளிக்கப்படாது.

(j) தனிநபர் தகவல் - பொதுநலனுக்குத் தொடர்பில்லாத அல்லது தனிநபரின் தனியுரிமையை மீறக்கூடிய / ஊடுருவக்கூடிய தகவல். குறிப்பு: நாடாளுமன்றத்துக்கோ அல்லது சட்டமன்றத்துக்கோ அளிக்க மறுக்க முடியாத தகவலை மக்களுக்கும் மறுக்கக் கூடாது. உதாரணமாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் தொடர்பான தகவல்கள்.
DPDP Act:
தனியுரிமையைக் காப்பது, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் கீழ் அடிப்படை உரிமை என்று 2017-ல் ஒரு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியதன் அடிப்படையில், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 2023 ஆகஸ்ட் 3-ம் தேதி நாடாளுமன்றத்தில் இது மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டு, ஒரே வாரத்தில் மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சட்ட விதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு இது நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், வரைவு விதிகள் பற்றிய கருத்துக் கேட்பு கடந்த ஜனவரியில் தொடங்கி பிப்ரவரி 18-ம் தேதியோடு நிறைவுசெய்யப்பட்டு, மீண்டும் அது மார்ச் 5-ம் தேதி வரை கருத்துக் கேட்பு நீட்டிக்கப்பட்டது. இனி மத்திய அரசு இதன் விதிகளை அறிவித்து நடைமுறைப்படுத்தவேண்டியது மட்டும்தான் மிச்சம். இந்த இடத்தில்தான், DPDP சட்டத்தின் பிரிவு 44 (3), தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் இருக்கிறது என எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருக்கிறது.
DPDP சட்டம் பிரிவு 44 (3): ``தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8, (1) (j) ஆனது, `தனிநபர் தொடர்புடைய தகவல்' என்று திருத்தம் செய்யப்படும்."
இப்போது நடைமுறையில் இருக்கும் RTI சட்டத்தின் பிரிவு 8, (1) (j)-ல், பொதுநலனுக்குத் தொடர்பில்லாத அல்லது தனிநபரின் தனியுரிமையை மீறக்கூடிய / ஊடுருவக்கூடிய தனிநபர் தகவலை அளிக்க விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இதன் உட்பொருள் என்னவென்றால், தனிநபரின் தகவல் பொதுநலன் சார்ந்ததாக இருக்கும்பட்சத்தில் அவற்றை RTI மூலம் கேட்பவருக்குக் கொடுக்க வேண்டும்.
மேலும், நாடாளுமன்றத்துக்கோ அல்லது சட்டமன்றத்துக்கோ அளிக்க மறுக்க முடியாத தகவலை மக்களுக்கும் மறுக்கக் கூடாது என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், DPDP சட்டம் நடைமுறைக்கு வந்தால் இச்சட்டத்தின் பிரிவு 44 (3) திருத்தத்தின்படி, RTI act பிரிவு 8, (1) (j) `தனிநபர் தொடர்புடைய தகவல்' என்று விலக்கு அளிக்கப்படும்.
அப்படி மாறினால், ஒரு திட்டம் சார்ந்து அரசு அதிகாரி பற்றியோ, அமைச்சர், உள்ளாட்சி நிர்வாகியின் செயல்பாடுகள் பற்றியோ அறிந்துகொள்ள RTI மூலம் மனு போட்டால், `தனிநபர் தொடர்புடைய தகவலை அளிக்கச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது' என்று மனு நிராகரிக்கப்படும்.
இங்கு மேலும் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது, `நாடாளுமன்றத்துக்கோ அல்லது சட்டமன்றத்துக்கோ அளிக்க மறுக்க முடியாத தகவலை மக்களுக்கும் மறுக்கக் கூடாது' என்பது முற்றிலுமாக நீக்கப்படும்.
உதாரணமாக, அரசு சார்பில் ஒரு ஊரில் ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் கீழ் வருமானம் ஈட்டும் 100 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கப்படுகிறது. இதற்கு, 200 குடும்பங்கள் விண்ணப்பிக்கின்றன.
அந்த 200 குடும்பங்களில் உண்மையில் 100 குடும்பங்கள் மட்டுமே ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், மற்ற 100 குடும்பங்கள் அதற்கு மேல் வருமானம் ஈட்டுபவை. முறைப்படி, தகுதியான 100 குடும்பங்களுக்குத்தான் அந்த 100 வீடுகளும் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவர்களில் 50 குடும்பங்களுக்கு மட்டுமே வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மீத 50 வீடுகள் ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் மேல் வருமானம் ஈட்டும் 50 குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதனை அம்பலப்படுத்த, 100 வீடுகள் பெற்ற பயனாளிகளின் பட்டியல் மற்றும் வீடு ஒதுக்கிய அதிகாரியின் விவரம் கேட்டு பாதிக்கப்பட்ட நபரோ அல்லது சமூக செயற்பாட்டாளரோ RTI மூலம் மனு போட்டால், DPDP சட்டம் பிரிவு 44 (3) திருத்தத்தின்படி தனிநபர் தொடர்புடைய தகவல் அளிக்க விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று மனு நிராகரிக்கப்படும்.
அப்போது, முறைகேடாக வீடுகள் பெற்ற பயனாளிகள், சம்பந்தப்பட்ட அதிகாரியின் உறவினரா அல்லது அந்த அதிகாரி லஞ்சம் வழங்கியிருக்கிறாரா என்பது சட்டப்பூர்வமாகவே மறைக்கப்படும்.
இது, பல ஆயிரம் கோடி மதிப்பிலான அரசுத் திட்டங்களுக்கும் பொருந்தும். அரசில் நடைபெறும் ஊழல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர முடியாத மோசமான நிலை உருவாகும்.

இறுதியில், பாதிப்பு என்னவோ தங்களை ஆளும் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குத்தான். இதன் காரணமாகத்தான், சமூக செயற்பாட்டாளர்களும், சமூக அமைப்புகளும் DPDP சட்டம் பிரிவு 44 (3) திருத்தத்தைத் திரும்பப்பெறுமாறு / முழுமையாக நீக்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றன. அரசியல் களத்தில் காங்கிரஸ் எதிர்ப்புக்குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறது.
தேசிய அளவிலான இந்தப் பிரச்னை மீதான எதிர்ப்புக்குரலை எதிர்க்கட்சிகள் கொள்கை முரண்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அரசியல் ஆதாயம் தேடாமல் மக்கள் நலனுக்காக ஒன்று திரண்டு மத்திய அரசின் செவிகளில் ஓங்கி ஒலிக்கச் செய்து, இந்த முடிவிலிருந்து பின்வாங்கச் செய்ய வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது.