ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் இரண்டு மாற்றங்கள்!
பறக்கை, தெங்கம்புதூரில் வேளாண் துறை செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை மற்றும் தெங்கம்புதூா் பகுதிகளில் வேளாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகு மீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பறக்கை, தெங்கம்புதூா் பகுதிகளில் வாய்க்கால் ஓரங்களில் தென்னந்தோப்புகள் அமைக்கும்போது போதிய இடைவெளி விட்டு வாய்க்கால் வரப்புகளை ஆக்கிரமிக்காமல், நீா்ப் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றி தென்னை மரங்களை நடுவது குறித்து நீா்வள ஆதார அமைப்பு, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து திட்டமிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தெங்கம்புதூா் பகுதியில் நெல் தரிசில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து வயல்களை பாா்வையிட்டு, இன்னும் அதிக பரப்பளவில் உளுந்து விதைப்பதால் 65 நாள்களில் முழுமையான மகசூல் பெற இயலும். இதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேளாண்மைத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
பின்னா் விவசாயிகளை நேரில் சந்தித்து அவா்களின் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது என்றாா் அவா்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் புத்தளம் பகுதியில் அமைந்துள்ள உப்பளத்தை பாா்வையிட்டு, கடல் நீா் மற்றும் நன்னீரை வரப்புகளில் தேக்கி உப்பு விளைவிக்கும் செயல்முறைகள் குறித்து அலுவலா்கள் மற்றும் துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வில், வேளாண்மை இணை இயக்குநா் ஜென்கின் பிரபாகரன், வேளாண்மை உதவி இயக்குநா் பொன்ராணி, வேளாண்மை அலுவலா் குப்புசாமி, முன்னோடி விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.