Amul: "நெய், தயிரைத் தொடர்ந்து விரைவில் தமிழ்நாட்டில் பால் விற்பனை" - அமுல் நிறுவன எம்.டி பேட்டி
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - 2025, திருச்சி மாநகரில் உள்ள கலையரங்கத்தில் கடந்த 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று நாள்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்த மாபெரும் வேளாண் கண்காட்சிக்கு சத்யம் அக்ரோ கிளினிக் மற்றும் அமுல் ஆர்கானிக் பெர்ட்டிலைஸர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஆதரவை வழங்கியிருந்தன.
கண்காட்சியின் இரண்டாம் நாளின்போது குஜராத்தில் செயல்படும் பால் கூட்டுறவு நிறுவனமான அமுல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அமித் வியாஸ் கலந்துகொண்டார். கண்காட்சியில் இடம்பெற்ற அரங்குகளைப் பார்வையிட்ட அவர், பிறகு அமுல் நிறுவன அரங்கில் இருந்தவாறே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அமித் வியாஸ்,

"அமுல் நிறுவனம் 1946 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே விவசாயிகளின் கூட்டு முயற்சியால் நடத்தப்பட்டு வருகிறது. குஜராத்தைக் கடந்து இந்திய முழுவதும் அமுல் பால் பொருள்களின் சந்தை வியாபித்துள்ளது. இந்தியாவைக் கடந்து பல நாடுகளிலும் அமுல் பொருள்களின் விற்பனை இருந்து வருகிறது. பால் உற்பத்தியோடு இயற்கை விவசாயத்துக்கு உதவும் வகையில் 4 ஆண்டுகளுக்கு முன் இயற்கை உரங்களைத் தயாரிக்கத் தொடங்கினோம்.
இங்கே கண்காட்சியில் நாங்கள் வைத்திருப்பது எல்லாமே சாணம் கலந்த இயற்கை உரங்கள்தான். நாங்கள் விவசாயிகளிடம் இருந்து சாணத்தை வாங்கி அதில் இருந்து காஸ் (gas) உற்பத்தி செய்கிறோம். இதில் வரும் தேவையில்லாத கழிவுகளை மதிப்புக்கூட்டி இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
குஜராத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த இந்தப் பொருள்கள், தற்போது தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் கிடைக்கத் திட்டமிட்டுள்ளோம். விவசாயத்தின் எதிர்காலம் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருப்பது சந்தோஷமாக உள்ளது. பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை மண்ணில் இடுவதால் மக்களுக்குப் பல நோய்கள் வருவதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்த உரம் மண்ணில் ஊடுருவி, நிலத்தில் தண்ணீரின் அளவை அதிகரிக்க உதவும். இது, விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலையும், உற்பத்தியையும் கொடுக்கும். இதன் மூலம் விவசாயிகள் நன்மை அடைவதோடு, நாட்டு மக்களும் நோய்கள் இல்லாமல் வாழ வழிவகை செய்யும்.

அமுல் நிறுவனத்தின் பால் பொருள்கள் தமிழ்நாடு மட்டுமல்லாது, கர்நாடகா மற்றும் ஜம்மு காஷ்மீர் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் பட்டர், சீஸ், ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் போன்ற வடிவங்களில் உணவுப்பொருள்களை வழங்கிக்கொண்டு இருக்கிறது. வரும் காலங்களில் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு அமுலைக் கொண்டுசெல்ல உள்ளோம். தற்போது, சென்னையில் அமுல் தயிரை விற்பனைசெய்து வருகிறோம். விரைவில் தமிழகத்தில் அமுல் பால் விற்பனையைத் தொடங்குவோம். அமுல் ஒரு கூட்டுறவு நிறுவனம். அதனால், நாங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறோமோ அதை விவசாயிகளுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுவோம். 1 ரூபாய் சம்பாதித்தால் அதில் 85 பைசாவை விவசாயிகளுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுவோம். இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்றும் வட மாநிலங்களில் மட்டுமே அமுல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. தற்போது தென் மாநிலங்களிலும் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இதன் மூலம் பொருள்களை உள்ளூரிலே உற்பத்திசெய்து, உள்ளூரிலேயே விற்பனை செய்ய உள்ளோம்.
விவசாயிகளை நம்மைப் போன்றவர்கள் ஆதரிக்கமுடியும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்தான் இயற்கை உர தயாரிப்புக்குள் வந்திருக்கிறோம்.

குஜராத்தில் 50,000 ஏக்கர் விவசாய நிலத்திலிருந்து இயற்கை உரங்களைத் தயாரிக்கிறோம். சுமார் 75,000 விவசாயிகள் இதனுடன் இணைந்துள்ளனர். இதே போல், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்திலும் செய்து வருகிறோம். முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் சார்ந்த இந்தக் கருத்தரங்கில் அமுலும் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இன்று இங்கே இருப்பதற்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது. இதற்குக் காரணமாக இருந்த பசுமை விகடன் குழுவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்" என்றார்.
நிறைவாக பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போவின் ஓர் அங்கமாக நடைபெற்று வந்த கருத்தரங்கக் கூடத்துக்கு வந்தார். அங்கே அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.