கிருஷ்ணகிரியில் தாலியுடன் பள்ளி வந்த மாணவி: ஐந்து பேர் கைது!
`கரன்ட்; கடன்; விலை?'- நாராயணசாமி நாயுடுவின் நிறைவேறாத கனவு;நிறைவேற்றுமா அரசு?
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு தொடங்கியதையொட்டி தமிழகம் முழுவதும் விவசாயிகள் கொண்டாடி வருகிறார்கள்.
கோயம்புத்தூரை அடுத்த வையம்பாளையத்தில் அவருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் அவருடைய நூற்றாண்டு தொடங்கியதையொட்டி பலரும் அங்கே சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 70-களில் விவசாயப் போராட்டங்களால் தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே விவசாயிகளின் பக்கம் கவனத்தைத் திருப்பியவர். அவருடைய நூற்றாண்டு விழா விவசாயிகள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/k3wondoj/NarayanasamyNaiduManiMandapam443378.jpg)
இதுகுறித்து இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் நம்மிடம் பேசியபோது, “தமிழ்நாட்டில் இன்று பல விவசாய சங்கங்கள் இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக இருந்தது தமிழக விவசாயிகள் சங்கம். இதை நிறுவியவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த நாராயணசாமி நாயுடு. தமிழ்நாட்டில் விவசாயிகளின் பிரச்னைகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல எண்ணற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர். இன்றைக்கு யார் வேண்டுமென்றாலும் பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு விவசாயப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கலாம். அந்தளவுக்கு ஏகபோக உரிமையை விவசாயிகளுக்கு அளிக்க முக்கிய பங்காற்றியவர் நாராயணசாமி நாயுடு.
100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாராயணசாமி நாயுடுவை, இப்போது நினைவு கூர்வது அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன். ஏனென்றால் இந்தியாவில் முதன்முறையாக விவசாயத்துக்கு இலவச மின்சாரத்தை அறிவித்தது தமிழ்நாடுதான். ஆனால், அது உடனடியாக அறிவிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக எண்ணற்ற போராட்டங்களை நடத்தி 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்த பிறகுதான் இப்படியொரு அறிவிப்பைப் பெற முடிந்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/mmmibe1c/BullockCartprotestbyfarmers443375.jpg)
இந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தி, விவசாயிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த காரணமானவர் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் நாராயணசாமி நாயுடு. அவர்தான் விவசாயிகளை ஒன்றுதிரட்டி போராட்டங்களை முன்னெடுத்தவர். இவருடைய போராட்டங்களால்தான் 1982-ல் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு முதலில் இலவச மின்சாரம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1989-ல் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
கடன் தள்ளுபடி என்கிற ஒரு விஷயமே நாராயணசாமி காலத்தில்தான் அறிமுகமானது. விவசாயிகள் பல இன்னல்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர். அதைத் தொடர்ந்து தமிழக அரசு, மத்திய அரசு என்று கடன் தள்ளுபடி என்றொரு விஷயத்தை கையில் எடுத்தது.
அப்போதெல்லாம் கடன் வசூலுக்காக விவசாயிகளின் வீட்டை ஜப்தி செய்ய வருவார்கள். அதை எதிர்த்து பெரிய குரல் கொடுத்தவர். 1982-ல் விவசாயிகளிடம் தீவிர கடன் வசூல் வேட்டையை அரசு நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் தாக்கப்பட்டார்கள். லட்சக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். பொய் வழக்குகளை களைய தேர்தலில் போட்டியிட இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சியின் பெயரில் தேர்தல்களைச் சந்தித்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/kp75rwry/476207306_8744650132307791_8709220191971199592_n.jpg)
நாராயணசாமி நாயுடுவுக்குப் பிறகு அவரின் மகன் நந்தகுமார் தலைவராக இருந்தார். அவருக்குப் பிறகு அதன் தலைவராக இன்று வரை இருந்து வருகிறேன். தமிழகம் முழுவதும் எண்ணற்ற விவசாயிகளை ஒருங்கிணைத்து மின் கட்டண உயர்வுக்கு பல போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். விவசாயிகளின் போராட்டங்கள் வழியாக ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும் ஆட்டிப் படைத்திருக்கிறார். பல தரப்பட்ட பொருளாதாரப் பிரச்னைகளிலும் விவசாய போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். கடைசியில்கூட விவசாயிகளுக்கான தேர்தல் பிரசாரத்தில்தான் 21.12.84-ல் அவர் உயிர் பிரிந்திருக்கிறது. 6.2.1925-ல் பிறந்த இவர், விவசாயிகளிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
நாராயணசாமி நாயுடு வலியுறுத்திய இன்னொரு விஷயம் விளைபொருள்களுக்கு நியாயமான மற்றும் கட்டுபடியான விலை. இதுசார்ந்த போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கிறார். அவருடைய நூற்றாண்டில் விளைபொருள்களுக்கு நியாயமான விலையை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/4t5fi5pz/NarayanasamyNaidu443380.jpg)
மின்சாரத்துக்காகப் போராடினார், அது கிடைத்தது. விவசாய கடன் தள்ளுபடியும் அவ்வப்போது நிறைவேறியிருக்கிறது. ஆனால், விளைபொருள்களுக்கு நியாயமான மற்றும் கட்டுபடியான விலை என்பது இன்னும் நிறைவேறாத கனவாகவே இருந்து கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டையொட்டி அது நிறைவேறினால் அவருடைய கனவு நிறைவேறிவிடும்” என்றார்.