குறைபிரசவத்தில் பிறந்து இறந்த குழந்தை; குப்பையில் வீசிய உறவினர்கள்; நாய்கள் கடித்து குதறிய கொடூரம்!
உத்தரப்பிரதேச மாநிலம், லலித்பூர் என்ற இடத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்தது. இதனால் குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் குழந்தை இறந்து போனது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் குழந்தையின் உடலை அதன் உறவுக்கார பெண் ஒருவரிடம் ஒப்படைத்திருந்தனர். ஆனால் அக்குழந்தையின் உடல் மருத்துவமனை வளாகத்தில் இருந்த மைதானத்தில் கிடந்தது. அதனை தெருநாய்கள் கடித்துத் தின்று கொண்டிருந்தன. இதனை பார்த்த பொதுமக்கள் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/hwak9b0f/images-49.jpg)
உடனே காவலர்கள் ஓடி வந்து நாயை விரட்டினர். அதற்குள் நாய்கள் குழந்தையின் தலையை தின்று இருந்தன. போலீஸாருக்கு தகவல் கொடுக்கும் முன்பாக குழந்தையின் உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இச்சம்பவம் நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விசாரிக்க மருத்துவமனை நிர்வாகம் நான்கு பேர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்திருக்கிறது.
இச்சம்பவம் குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி மீனாட்ஷி சிங் கூறுகையில், ''குழந்தை பிறக்கும்போது தலை சரியாக வளர்ச்சியடையவில்லை. முதுகு தண்டு பகுதியும் இல்லாமல் இருந்தது. இதய துடிப்பும் குறைவாக இருந்தது. இதனால் குழந்தை பிழைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. பிறந்த நாள் மாலையில் குழந்தை இறந்துவிட்டது. இதையடுத்து அதன் உடல் குழந்தையின் சித்தியியிடம் கைரேகை பெற்றுக்கொண்ட பிறகு கொடுக்கப்பட்டது.
உறவினர்கள் குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பேக்கில் வைத்து குப்பை தொட்டியில் போட்டிருக்க வேண்டும். குழந்தையின் உடம்பில் மருத்துவமனை டேக் இருந்தது. அதன் மூலம் மருத்துவமனையில் பிறந்த குழந்தை என்று அடையாளம் காணப்பட்டது'' என்று தெரிவித்தார். இம்மருத்துவமனையில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.