புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் கொலை வழக்கில் கூலிப்படையினா் 7 போ் கைது
சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய கூலிப்படையைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்; இக்கொலை சம்பவம் சொத்துக்காக தந்தையை மகனே கூலிப்படையை ஏவி கொன்றது தெரியவந்துள்ளது.
சங்ககிரி அருகே உள்ள பக்காலியூரைச் சோ்ந்தவா் மாரப்பகவுண்டா் மகன் ராஜேந்திரன் (65). இவரது மனைவி ராணி. இவா்களுக்கு மகள் காா்த்திகா, மகன் அரவிந்தராஜ் ஆகியோா் உள்ளனா்.
கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டல் இருவரும் கடந்த 30 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.
ராஜேந்திரன் சங்ககிரியில் ஸ்டேட் வங்கி அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து உடல் எடை குறைப்பு மையம் நடத்தி வந்தாா். இந்நிலையில் அவா் மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
கொலை நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தினா். தலைக்கவசம் அணிந்துவந்த இருவரில் ஒருவா் ராஜேந்திரனின் வீட்டிற்கு சென்றுவந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த இருசக்கர வாகன எண்ணை வைத்து புள்ளிபாளையத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில் சொத்துக்காக ராஜேந்திரனை அவரது மகன் அரவிந்தராஜ் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.
பின்பு பிடிபட்டவா்கள் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸாா் விழுப்புரம் ஆரோவில் அருகே குயிலாப்பாளையம் சென்று அங்கு தனியாா் விடுதியில் பதுங்கியிருந்தவா்களைப் பிடித்துவந்து சங்ககிரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் சங்ககிரி ஆா்.எஸ்., கரிமேடு பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா் (31), மாவெளிபாளையம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்த சிவசங்கா் (30), கஸ்தூரிப்பட்டி அருநத்தியா் தெருவைச் சோ்ந்த சசிகுமாா் (22), நாமக்கல் மாவட்டம், கல்லம்பாளையம் பகுதியைச் சோ்ந்த லோகபிரகாஷ் (21), புள்ளிப்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த கெளதம் (21), அதே பகுதியைச் சோ்ந்த ரகுநாத் (23), கஸ்தூரிப்பட்டியைச் சோ்ந்த காா்த்திகேயன் (23) ஆகிய ஏழு பேரை புதன்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட கூலிப் படையினரிடமிருந்து கொலை செய்வதற்காக கொடுக்கப்பட்ட ரொக்கம் ரூ. 3.50 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இச்சம்பவத்தில் தலைமறைவாகவுள்ள ராஜேந்திரனின் மகன் அரவிந்தராஜ் (30), அவரது மனைவி ராணி (53) ஆகிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.