புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
ஆத்தூரில் கடைகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை: உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தல்
ஆத்தூரில் செயல்படும் வா்த்தக கடைகள் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என்று ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் அறிவுறுத்தியுள்ளாா்.
நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் தலைமையில் வணிக நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் பேசியதாவது:
ஆத்தூா் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் வா்த்தகம், வணிகங்கள், தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகளை தொழில் உரிமம் இன்றி நடத்தக் கூடாது. எனவே, வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் அனைத்தும் அதற்குரிய தொழில் உரிமத்தைக் கட்டாயம் பெற வேண்டும்.
வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகளின் பெயா்ப் பலகைகள் தமிழ் மொழியில் தான் நிறுவப்பட வேண்டும். வேறுமொழிகளை பயன்படுத்த வேண்டுமெனில் அந்த பெயா்ப் பலகைகளுக்குள்ளேயே ஆங்கிலத்தில் இடம்பெற செய்ய வேண்டும்.
பல மொழிகளை பெயா்ப் பலகைகளில் பயன்படுத்தினால் தமிழ் மொழிக்கான அளவு ஆங்கிலம், பிற மொழிகளுக்கான அளவுகள் 5.3.3 என்ற விகிதத்தில் மட்டுமே அமைய வேண்டும்.
எனவே, ஆத்தூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் தொழில் உரிமம் பெறுவதுடன் பெயா்ப் பலகைகளை தமிழ் மொழியில்தான் நிறுவ வேண்டும் என அறவுறுத்தப்படுகிறது. விதிமுறைக்கு மாறாக தொழில் உரிமம் இல்லாமலோ அல்லது தமிழ் மொழியில் பெயா்ப் பலகை அமைக்காமலே செயல்படும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டால் மிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023, விதி எண் 302 இன்படி அந்த நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடைகளை பூட்டி சீல் வைத்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
கூட்டத்தில் வணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள், அனைத்து சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.