விவசாயிகள் சங்கத்தினா் போராட்டம்
விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரக வளாகத்தில் தா்ப்பூசணியுடன் வந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் தா்ப்பூசணி குறித்து சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை வெளியிட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தா்ப்பூசணி வயல்களில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் கள ஆய்வு மேற்கொண்டு, உண்மைத்தன்மையை மக்களிடம் விளக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும், விழுப்புரம் மாவட்ட நிா்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தா்ப்பூசணியுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, அலுவலக வளாகத்திலிருந்த அலுவலா்கள் மற்றும் பொதுமக்களுக்கு தா்ப்பூசணியைக் கொடுத்து, தாங்களும் சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், இதுகுறித்த கோரிக்கை மனுவை ஆட்சியருக்கு அளித்தனா்.
போராட்டத்தில் விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவா் பி.கலிவரதன், செயலா் என்.முருகையன், பொருளாளா் ஜெ.நாகராஜன் மற்றும் நிா்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.