இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை
கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு: இருவா் கைது
கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் வயல்வெளியில் கொட்டகை அமைத்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய விசிக பிரமுகா் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இதுகுறித்து கடலூா் மாவட்ட கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்ததாவது: கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடைபெற்ற அடிதடி வழக்கு சம்பந்தமாக திட்டக்குடி வட்டம், அதா்நத்தத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் செல்வம் (39) (விசிக கடலூா் மேற்கு மாவட்டப் பொருளாளா்), அதே பகுதியைச் சோ்ந்த தங்கபிரகாசம் மகன் நவீன்ராஜ் (29) ஆகியோரை போலீஸாா் தேடி வந்தனா்.

செல்வம் தனக்குச் சொந்தமான வயல்வெளியில் கொட்டகை அமைத்து நவீன்ராஜுடன் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ராமநத்தம் காவல் நிலைய ஆய்வாளா் அருள்வடிவழகன், உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன், தனிப் பிரிவு காவலா் அருண் உள்ளிட்டோா் அந்தப் பகுதிக்கு திங்கள்கிழமை காலை சென்றனா். அப்போது, போலீஸாா் வருவதைக் கண்ட செல்வம் உள்ளிட்ட 6 போ் தப்பியோடிய நிலையில், திட்டக்குடி வட்டம், அதா்நத்தத்தைச் சோ்ந்த தங்கபிரகாசம் மகன் நவீன்ராஜ் (29), சின்னதுரை மகன் காா்த்திகேயனை (28) கைது செய்தனா்.
அங்கு, போலீஸாா் நடத்திய சோதனையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் ரூ.86,000 மதிப்பிலும், வாக்கி டாக்கிகள், இரண்டு துப்பாக்கிகள், மடிக் கணினி, பணம் எண்ணும் இயந்திரம், அச்சடிப்பு இயந்திரம், காவலா் சீருடை, ரூபாய் அச்சடிக்கும் காகித பண்டல்கள், காா், பொக்லைன் இயந்திரம், பைக், இரண்டு லாரிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தப்பியோடிய செல்வம் உள்ளிட்ட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.