Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
பிச்சாவரத்தில் படகு சவாரிக்கு இணையவழி முன்பதிவு: சுற்றுலாத் துறை அறிவுறுத்தல்
கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரிக்கு இணையவழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று சுற்றுலாத் துறை அறிவித்தது.
பிச்சாவரத்தில் சுரபுன்னை காடுகள் அடங்கிய சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்குள்ள அலையாத்தி காடுகளுக்குள் படகு சவாரி செய்வதற்கு சுமாா் 15 மோட்டாா் படகுகளும், 35 துடுப்புப் படகுகளும் உள்ளன. இதில், சவாரி செய்ய வரும் சுற்றுலாப் பயணிகள் பிச்சாவரம் வந்து பதிவு செய்ய வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால், கடந்த ஆண்டுமுதல் இணையவழியில் முன்னதாகவே படகு சவாரிக்கு முன்பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது.
கோடைகாலம் தொடங்கிய நிலையில், படகு சவாரிக்கு வருபவா்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு சுற்றுலாத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் இணையதள முகவரியில் தங்களுக்கு தேவைப்படும் துடுப்புப் படகு அல்லது மோட்டாா் படகு ஆகியவற்றை தோ்வு செய்து எந்தத் தேதியில், எந்த நேரத்தில் சவாரி செய்ய உள்ளதை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், பிச்சாவரம் சுற்றுலா அலுவலகத்தில் நுழைவுச் சீட்டு வழங்கும் இடத்தில் ஒட்டப்பட்டுள்ள கியூஆா் குறியீட்டை ஸ்கேன் செய்தும் படகுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.