"ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்திருக்கு..! " - கேள்வி எழுப்பும் அன்புமண...
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: உள்விசாரணை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகக் கூறி, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும், உள்விசாரணை நடந்து வருகிறது, அதன் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம், இப்போது எடுக்கும் முடிவு முன்கூட்டி அவசரமாக எடுக்கும் முடிவாக இருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலின்படி, மூன்று நீதிபதிகள் கொண்ட உள்விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், ரிட் மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துவிட்டது.
நீதிபதி ஓகா, மனுதாரரும், வழக்குரைஞருமான மேத்யூஸ் ஜே நெடுப்மாராவிடம் கூறுகையில், நடந்து வரும் நடவடிக்கைகளை பார்த்து வருகிறோம், உள்விசாரணை முடிந்ததும் பல வாய்ப்புகள் உள்ளன. உள்விசாரணை அறிக்கையை ஆய்வு செய்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடலாம், அல்லது நாடாளுமன்றத்துக்கு இந்த விவகாரத்தை பரிந்துரைக்கலாம். இந்த மனுவை பரிசீலிக்க இது உகந்த நாள் இல்லை. உள் விசாரணை அறிக்கை வெளியானதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மனு மிக அவசரமாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.