எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!
ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து டி20-யிலும் சிறப்பாக செயல்பட விரும்பும் ஆப்கன் வீரர்!
டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட விரும்புவதாக ஆப்கானிஸ்தான் அணியின் பிரபல ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அஸ்மதுல்லா ஓமர்ஸாய், கடந்த ஆண்டு முழுவதும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவருக்கு கடந்த ஆண்டின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருது ஐசிசி சார்பில் வழங்கப்பட்டது. ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசியின் சிறந்த ஆல்ரவுண்டர்கள் தரவரிசையிலும் ஓமர்ஸாய் இடம்பிடித்தார்.
இதையும் படிக்க: எம்.எஸ்.தோனி தாமதமாக களமிறங்க காரணம் என்ன? ரகசியத்தை உடைத்த ஸ்டீஃபன் ஃபிளெமிங்!
டி20 போட்டிகளிலும்...
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அஸ்மதுல்லா ஓமர்ஸாய், டி20 போட்டிகளில் தனது ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த வேண்டும் எனவும், பந்துவீச்சின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அஸ்மதுல்லா ஓமர்ஸாய் பேசியதாவது: இதுவரை ஒருநாள் வடிவிலான போட்டிகளே எனக்கு சிறப்பான ஒன்றாக இருந்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் நீங்கள் நேரமெடுத்து சிறப்பாக விளையாடலாம். களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனால், டி20 போட்டிகளில் அதுபோன்று நேரம் கிடைக்காது. அதனால், ஐபிஎல் தொடரில் எனது ஸ்டிரைக் ரேட்டினை மேம்படுத்திக்கொண்டு அணிக்கு என்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்க விரும்புகிறேன்.
இதையும் படிக்க: கைவிடப்பட்ட பாகிஸ்தான் - வங்கதேசம் ஒருநாள் தொடர்; காரணம் என்ன?
சர்வதேச கிரிக்கெட் தற்போது மிகவும் வேகமாக உள்ளது. உங்களுக்கு ஒன்றிரண்டு திறமைகள் மட்டும் இருந்தால், உங்களை எளிதில் வீரர்கள் திறம்பட எதிர்கொண்டு விடுவார்கள். அதனால், புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. அதனால், என்னுடைய பந்துவீச்சின் லைன் அண்ட் லென்த்தில் முன்னேற்றம் கொண்டுவர முயற்சி செய்வேன். எனது பந்துவீச்சு வேகத்தை மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்துக்கு அதிகப்படுத்த முயற்சிப்பேன். வேகப் பந்துவீச்சாளராக எனது அணிக்கு பங்களிப்பை வழங்க விரும்புகிறேன். மிதவேகப் பந்துவீச்சாளராக விளையாட விரும்பவில்லை என்றார்.
இதுவரை 47 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 474 ரன்கள் மற்றும் 31 விக்கெட்டுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.