பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
கோலிக்கும் எனக்கும் சீனியர் - ஜூனியர் உறவு! மனம் திறந்த தோனி
விராட் கோலியும் தோனியும் எப்படி பழகுவார்கள் பேசுவார்கள் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை(மார்ச் 22) தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் பற்ரிய செய்திகள் பல வெளி வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம். எஸ். தோனி அண்மையில் அளித்துள்ள பேட்டியொன்றில் விராட் கோலிக்கும் தனக்குமான இடையிலான உறவு குறித்து பேசியுள்ளார்.
தோனி பேசியிருப்பதாவது: “எனக்கும் விராட் கோலிக்கும் தொடக்கத்திலிருந்தேசரி, கோலி அணிக்காக அதிகமான பங்களிப்பை வழங்க விரும்புபவர்.
40 ரன்களோ அல்லது 60 ரன்களோ எடுத்தால் அவருக்கு திருப்திகரமாக இருக்காது, அவர் மகிழ்ச்சியாக இருக்கவும் மாட்டார்.
100 ரன்கள் ஸ்கோர் செய்வதிலேயே அவரது கவனம் இருக்கும். அதனைத்தொடர்ந்து, ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நிற்கவும் அவர் விரும்புவார்.அவரது இந்த ரன் வேட்கை ஆரம்ப காலகட்டத்திலிருந்தே அவரிடம் இருந்து வருகிறது”.
“தன்னுடைய பேட்டிங் திறனை அவர் மெருகேற்றிக்கொண்டுள்ள விதமும்சரி, தொடர்ந்து திறம்பட விளையாட வேண்டும் என்கிற மன உறுதியும்தான் அவரை தொடர்ந்து செயல்பட வைத்துக்கொண்டிருக்கிறது. அவர் தன்னுடைய உடற்தகுதியையும் அதிகரித்துக் கொண்டுள்ளார்.
களத்தில் ஃபீல்டிங் செய்யும்போதும் அவர் என்னிடம் வந்து பேசுவார், “இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? எதைச் செய்யலாம்?” என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பார்.
அப்போது, அவரிடம் நான் ‘என்ன செய்ய வேண்டும்’ என்பதை வெளிப்படையாக பேசிவிடுவேன். எங்களது உறவு இப்படித்தான் வளர்ந்தது”.
“ஆரம்ப காலகட்டத்தில், நான் ஒரு கேப்டன், அவர் ஒரு புதுமுக வீரர் என்கிற ரீதியில் இருந்த எங்களது உறவு, இத்தகைய உரையாடல்களால் படிப்படியாக நட்பாக வளர்ந்துவிட்டது.
என்னதான் நாங்கள் நண்பர்களாக இருந்தாலும், சீனியர் - ஜூனியர் என்ற மெல்லிதானதொரு கோடு எங்களுக்கிடையே இன்னும் இருப்பதாகவே உணருகிறேன்.
எனினும், இப்போது நங்கள் இருவருமே கேப்டன்களாக இல்லாததால், ஒரு போட்டி தொடங்கும் முன்னர் டாஸ் சுண்டப்படுவதற்கு முன் நாங்கள் பேசிக்கொள்ள நிறையவே நேரம் கிடைக்கிறது” என்றார்.
“நான் கோலிக்கு அனுப்பிய மெசேஜ், தகவல் பரிமாற்றம், எங்களுக்குள்ளான பிற விஷயங்களை வெளியில் சொல்லமாட்டேன்.
ஏனெனில், ‘தோனியிடம் உங்கள் மனதில் பட்டதை வீரர்கள் தெரிவிக்கலாம், அவை மூன்றாவது நபரிடம் சொல்லப்படாது’ இந்த நம்பிக்கை மிக முக்கியம். இது இருக்கும் வரை பிற வீரர்கள் என்னிடம் வந்து மனம்விட்டு பேசுவார்கள்.
ஒரு வீரருக்கும் எனக்குமிடையிலான உரையாடல் மூன்றாவது ஆளுக்கு தெரியக்கூடாது. என்னுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடாத வீரர்களுக்கும் உதவி தேவைப்பட்டாலோ ஆலோசனை தேவைப்பட்டாலோ, அது கிரிக்கெட்டானாலும்சரி அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையானாலும்சரி, எதுவாக இருப்பினும் என்னிடம் அப்போதுதான் அவர்கள் வெளிப்படையாக பேசுவார்கள். அந்த நம்பிக்கை மிக முக்கியம்” என்றார்.