ஏப்.6 இல் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் மோடி
``பாஜக மீதான விமர்சனத்தை விஜய் தவிர்க்க வேண்டும்" - தமிழிசை பேட்டி
" 'மதுக்கடைகளை முற்றுகையிட்டு பா.ஜ.க நடத்திய போராட்டத்திற்கு, அவர்கள் ஆளும் மாநிலங்களில் மது ஒழிப்பு கொள்கையை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்களா?' என திருமா கேள்வியெழுப்பியிருக்கிறாரே?"
"பிற மாநிலங்களைவிடத் தமிழகத்தில்தான் மது விற்பனை அதிகம். அப்படிப் பார்த்தால் குஜராத்தில் மது விற்பனை இல்லை. தமிழகத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்று சொன்னால் பிற மாநிலத்தைப் பாருங்கள் என்று சொல்லும் அரசியல்தான் இங்கு நடக்கிறது. நாங்கள் தமிழகத்துக்காக அரசியல் செய்கிறோம். எனவே இங்குள்ள பிரச்னைகளைதான் கையில் எடுக்க வேண்டும்"

" ஆனால், 'பட்ஜெட்டின் முக்கியத் திட்டங்கள் பற்றிய செய்திகளை மறைக்கத்தான் முறைகேடுகள் நடந்ததாகச் சொல்கிறார்கள்' என்கிறாரே செந்தில் பாலாஜி?"
"செந்தில் பாலாஜி ஓடும் டிரான்ஸ்போர்ட்டிலும் ஊழல் செய்கிறார். உள்ளே போடும் டாஸ்மாக்கிலும் ஊழல் செய்கிறார். ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்றவர்தான், அவர். அமலாக்கத்துறை சொல்வதற்கு முன்பே பத்திரிக்கைகள் சொல்லிவிட்டன. பட்டவர்த்தனமாகப் பாட்டிலுக்கு ரூ.10 கமிஷன் வசூல் செய்யப்பட்டு வந்தது. இதற்கும், செந்தில் பாலாஜிக்கும் பெரிய தொடர்பு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததுதான். தற்போது பாட்டிலுக்கான கமிஷனை ரூ.30 ஆக அதிகரித்திருக்கிறார்கள்"

" 'அமலாக்கத் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தையாக உள்ளது' என விஜய் கேட்பதும் நியாயம் தானே?"
"விஜய் தி.மு.க-வை கடுமையாக விமர்சனம் செய்கிறார். இதனால் பா.ஜ.க பக்கம் சென்றுவிடுவார் என நினைத்து விடுவார்கள் என்பதற்காக பா.ஜ.க-வையும் விமர்சிக்கிறார். இதை அவர் தவிர்க்க வேண்டும். பிரதமர் மோடியின் ஆட்சியில் குற்றம் செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது"

"பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு என அ.தி.மு.க தலைவர்கள் சொல்கிறார்கள். ஆனால், 'எங்களுக்காக அ.தி.மு.க தவம் கிடக்கிறது' என அண்ணாமலை சொல்வது சரியா?"
"இதற்குப் பின்னால் பல செய்தியாளர் சந்திப்புகள் நடந்துவிட்டது. அண்ணன் எடப்பாடி, 'நானும் அண்ணாமலையும்தான் பத்திரிகையாளர்களுக்குக் கிடைத்தோமா?' எனக் கேட்டுவிட்டார். அதேபோல் அண்ணாமலையும், 'நான் பொதுவாகத்தான் சொன்னேன்' எனத் தெரிவித்துவிட்டார். நாங்கள் தி.மு.க-வை அகற்ற வேண்டும் என்கிற கருத்துடையவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம். ஆனால் கூட்டணி குறித்த முடிவுகளையெல்லாம் மத்திய தலைமைதான் எடுக்கும்."

" 'மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பிஸ்கெட், சாக்லேட் கொடுத்து பள்ளி குழந்தைகளை ஏமாற்றி பா.ஜ.க கையெழுத்து வாங்குகிறது என்கிறாரே அன்பில் மகேஷ்?"
"நீட்டுக்கு எதிராகப் பள்ளிக்குள் சென்று கையெழுத்து வாங்கினவர்கள்தான், தி.மு.க-வினர். ஆனால் எங்களைப் பார்த்து பிஸ்கெட், சாக்லேட் கொடுக்கிறோம் என்கிறார்கள். பெண்களுக்கு ரூ.1,000 கொடுப்பது, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை கொடுப்பதெல்லாம் ஓட்டுக்காகக் கொடுக்கிறார்கள் என்று நாங்கள் சொல்கிறோமா?. குழந்தைகள் விருப்பப்பட்டுத்தான் வருகிறார்கள்"

" 'தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது' என முதல்வர் சொல்வதை மறுக்க முடியுமா?"
"மத்திய அரசு எங்கும் அதிகாரப்பூர்வமாகத் தொகுதி மறுசீரமைப்பைக் கொண்டுவரப்போகிறோம் எனச் சொல்லவில்லை. அப்படியே வந்தாலும், 'தமிழகத்தில் ஒரு தொகுதி கூட குறையாது' என, உள்துறை அமைச்சர் அமித்ஷாவே தெரிவித்துவிட்டார். ஸ்டாலின் யூகத்தின் அடிப்படியில் பேசி வருகிறார்"

“ஆனால், ‘ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்கூட, மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையில் உயருமா அல்லது மக்கள்தொகை அடிப்படையில் உயருமா... என்ற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை’ என ஆ.ராசா சொல்கிறாரே?”
"அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் போதுதான் சொல்வார்கள். இவர்கள் ஏதாவது ஒன்றை எடுத்துச்சென்றால் அதற்கெல்லாம் எப்படி பதில் சொல்வார்கள். பிரச்னை இல்லை என்று தெரிவித்த பிறகும் தி.மு.க-வினர் அரசியல் செய்கிறார்கள். வேங்கைவயல் விவகாரம் என்ன ஆனது?. திருநெல்வேலியில் 46 கொலைகள் நடந்துள்ளன. காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலையுண்ட விவகாரத்திலெல்லாம் தமிழக அரசு என்ன செய்திருக்கிறது?. காங்கிரஸ் காரர்களுக்கு வெட்கம் இல்லையா?"

“மத்திய அரசும்கூட, ‘பிரயாக்ராஜ் கும்பமேளா நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை’ என நாடாளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறதே?”
"கும்பமேளா நாட்டின் பெருமை. ஏற்கெனவே உயிரிழப்பு, காயம் குறித்ததெல்லாம் யோகி ஆதித்யநாத் தெரிவித்துவிட்டார். நாடாளுமன்றத்தில் டேட்டா கொடுத்தாலும் அதிலும் தவறு இருக்கிறது என்றுதான் எதிர்க்கட்சிகள் சொல்லும். அவர்கள் அனைத்திலும் அரசியல் செய்வதை முதலில் கைவிட வேண்டும்"
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play