செயற்கை கருத்தரிப்பு: கோடிகளில் புரளும் வர்த்தகம்; அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நெறிமுறைகள்!
பன்னிரண்டு மாதங்களுக்கு மேலான பாதுகாக்கப்படாத தொடர் உடலுறவுக்குப் பிறகும், ஒரு தம்பதியருக்கு குழந்தைப்பேறு கிடைக்காத நிலையைத் தான் 'Infertility' எனும் கருவுறாமை நிலை என மருத்துவர்கள் அழைக்கின்றனர்.
பொதுவாக இயற்கையாகக் கருத்தரிக்கவியலாத காரணங்கள் ஆண்-பெண் இருவரில் ஒருவரிலோ, அல்லது இருவருமிலோ இருக்கக்கூடும் என்றாலும், அவற்றை எளிய சிகிச்சை முறைகளால் குணப்படுத்த முடியாத நிலையில், அடுத்து மேற்கொள்ளப்படுவது தான் 'Assisted Reproductive Techniques' (ART) எனும் செயற்கைக் கருத்தரித்தல் முறை.
இந்த செயற்கைக் கருத்தரிப்பு முறைகளில் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சிலவற்றையும், அவற்றிற்கான ஏன், எதற்கு, எப்படியையும் இனி பார்ப்போம்..
பொதுவாக, IUI (In Utero Insemination) எனும் செயற்கை விந்தூட்டல் முறை, IVF (In Vitro Fertilization) எனும் சோதனைக்குழாய் முறை மற்றும் Surrogacy என்னும் வாடகைத்தாய் முறை ஆகிய மூன்று செயற்கை கருத்தரித்தல் முறைகளே கருவுறாமை சிகிச்சையில் பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கிலாந்து மருத்துவர்கள் ராபர்ட் எட்வர்ட்ஸ் மற்றும் பாட்ரிக் ஸ்டெப்ட்டோ ஆகியோரின் முயற்சியால் லூயிஸ் பிரவுன் என்ற உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை பிறந்து கிட்டத்தட்ட 48 வருடங்கள் கடந்த இன்றைய நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) வாயிலாக விந்தணு மற்றும் கருமுட்டைகளின் தரம் ஆய்வு, சினைப்பை புத்துயிர்ப்பு (Ovarian rejuvenation) சிகிச்சை, செயற்கை கருவிலேயே மரபணுக்கள் பரிசோதனை (PGT) உள்பட பல அதிசயிக்கத் தக்க மாற்றங்களை செயற்கை கருத்தரிப்பு, நாளுக்கு நாள் சந்தித்துக்கொண்டு தான் வருகிறது.
மேற்சொன்ன இந்த முக்கிய செயற்கை கருத்தரிப்பு முறைகளை பற்றியும், அவற்றின் நன்மை தீமைகளைப் பற்றியும் நாம் சற்று ஆழமாகப் புரிந்துகொள்ளும் முன், சில முக்கியத் தகவல்களைப் பார்ப்போம்..
சவாலாக நிற்கும் கருவுறாமை: 5-ல் ஒருவருக்கு பாதிப்பு!
இன்றைய இளைய தலைமுறையினர் சந்தித்துவரும் மிகப்பெரிய சவால் கருவுறாமை எனலாம். சுற்றுச்சூழல் மாசு, மேற்கத்திய உணவுமுறைகள், நோய்த்தொற்றுகள், மரபணு பிரச்னைகள் இவற்றுடன் கல்வி மற்றும் தொழில் சார்ந்த மாற்றங்கள், அதனால் தாமதிக்கும் திருமண வயது, மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றங்கள் என பற்பல காரணங்கள் தனித்தும் ஒன்றுகூடியும், குழந்தையின்மையை ஏற்படுத்துவதும், அதற்காக அதிகளவில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளை மேற்கொள்வதும் இன்றைய நவீன உலகில் இயல்பானதொன்றாக மாறிவிட்டது..!

புள்ளியியல் படி, ஐந்தில் ஒரு தம்பதியினருக்கு குழந்தைப்பேறின்மை காணப்படுவதைப் போலவே, இதுநாள் வரை மிக அரிதாக பெருநகரங்களில் மட்டுமே இயங்கிவந்த செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இன்று Tier 2, Tier 3 என அழைக்கப்படும் சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம்.
பெருகி வரும், அதேசமயம் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் இந்த அறிவியல் முன்னேற்றமானது குழந்தைப்பேறின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியினருக்கு, அதுவும் குழந்தைப்பேற்றுக்காக நமது நாட்டில் மட்டுமே காத்திருக்கும் கிட்டத்தட்ட 2.64 கோடி தம்பதியினருக்கு நிச்சயம் பெரு வரம் தான்.
உலகளவில் இந்த மாற்றங்கள் அனைத்தும் நிகழ்ந்து வருகின்றன என்றாலும், ஆசிய பசிபிக் பகுதிகளில், குறிப்பாக நமது நாட்டில் செயற்கை கருத்தரிப்பு என்பது ஒரு மிகப்பெரிய வாணிபமாக உருவெடுத்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
உலகளவில் தற்போது 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என இருக்கும் செயற்கை கருத்தரிப்பின் பங்குச்சந்தை, 2030-ம் ஆண்டிற்குள் 45 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 4500 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நமது நாட்டிலும், வருடத்தில் 2-2.5 லட்சம் ஐ.வி.எஃப். சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் தற்போதைய நிலையில், செயற்கை கருத்தரிப்பின் பங்குச்சந்தை, முந்தைய 7.8 சதவிகிதத்திலிருந்து வரும் நாள்களில் 18.08% அளவில் பொருளாதாரத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் குறைந்த செலவில் சிகிச்சை என்பதால், மெடிக்கல் டூரிசம் மூலம் வரும் வருவாயும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிக வருவாய் என்றாலே அதிகப் பிரச்னைகளும், தொழில்நுட்ப துஷ்பிரயோகங்களும் தான் என்பதை அறிவோம். தமிழக அரசின், "அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு முறைகள் இனி செயலாக்கப்படும்" எனும் சமீபத்திய அறிவிப்பு நமக்கு நினைவிருக்கும். உண்மையில் இதுவரை மத்திய அரசின் நலத்திட்டம் மூலமாக எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும், கேரளா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் மட்டுமே செயற்கை கருத்தரிப்பு முறைகளை அரசு நலத் திட்டத்தில் இணைத்து, இவற்றை எளிமைப்படுத்தி உள்ளன என்றாலும், பெரிதும் தனியார்மயமாக மட்டுமே இயங்கும் இந்தத் துறையில் ஒழுங்கீனங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன என்பதுதான் வருந்தத்தக்க உண்மை.!
கருத்தரிப்பு சிகிச்சைகளும், கோடிகளில் புரளும் வர்த்தகமும்...
13 வயதில் அடுத்தடுத்து கருமுட்டை தானம் செய்த வாரணாசி சிறுமியும், 16 வயதில் அடுத்தடுத்து கருமுட்டை தானம் செய்த ஈரோடு சிறுமியும், பல பிரபலங்களின் வாடகைத் தாய் முறைகளும், இன்னும் பிற செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளும், இதனால் கோடிகளில் புரளும் வர்த்தகமும் பல கேள்விகளையும் நெறிமுறைகளையும் நம்மிடையே எழுப்புகின்றன.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, 2008-ம் ஆண்டில் ஐசிஎம்ஆர் (ICMR) அளித்த செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் பரிந்துரைகளை இன்னும் முறைப்படுத்தி, ART Bill எனும் இனப்பெருக்க சிகிச்சை மசோதாவை 2021-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் வெளியிட்ட அரசாங்கம், 2022-ம் ஆண்டில் ஏ.ஆர்.டி. சட்டமாக அதனை நிறைவேற்றியுள்ளது.

சில நெறிமுறைகள்...
இந்த இனப்பெருக்க சிகிச்சை சட்டத்தின்படி, சிகிச்சை பெறுபவர்களும் அளிப்பவர்களும் நிச்சயம் பின்பற்ற வேண்டிய சில நெறிமுறைகளை நாம் தெரிந்து கொள்வோம்:
சிகிச்சை பெறுபவர்களின் வயது வரம்பு பெண்ணுக்கு 21-50, ஆணுக்கு 21-55 என ஏ.ஆர்.டி. சட்டம் வரையறைப்படுத்தியுள்ளது. இதில் வயது சான்றிதழ், திருமணச் சான்றிதழ், தேவைப்படும் இடத்தில் விவாகரத்து சான்றிதழ் ஆகியவற்றை இந்திய பிரஜைகளுக்கும், இவற்றுடன் பாஸ்போர்ட் மற்றும் மெடிக்கல் விசாவை வெளிநாட்டவர்களுக்கும் வலியுறுத்தும் இந்தச் சட்டம், திருமணமாகாத தம்பதியினர், மூன்றாம் பாலினத் தம்பதியினர் மற்றும் தனித்து வாழும் ஆண் ஆகியோருக்கு இந்தச் சேவையை முற்றிலும் மறுக்கிறது.
தம்பதியினருக்கு (commissioning couple) மேற்கொள்ளப்படும் சிகிச்சை குறித்த தெளிவான புரிதல்களும், சிகிச்சை முறையின் பக்கவிளைவுகள் மற்றும் விலை விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்த உறுதிமொழியை எழுத்துருவில் பெற வேண்டும் என்றும் அதன் ரகசியங்கள் முழுதும் காக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. மேலும், கருமுட்டை அல்லது விந்தணு தானம் அளிப்பவர்களின் வயதையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் வலியுறுத்துவதுடன் அவர்களது மறைகாப்பையும் (secrecy) உறுதிபடுத்தச் சொல்கிறது.
இறுக்கிப் பிடிக்கும் சட்டம்...
மறுபக்கத்தில் சிகிச்சையளிக்கும் நிலையங்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இன்னும் கடினமாகும் இந்த ஏ.ஆர்.டி. சட்டம், செயற்கை கருத்தரிப்பு நிலையங்களை முதல் நிலை, இரண்டாம் நிலை (Level I, II) என்று பிரிப்பதுடன், அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை முறைப்படுத்தி, அதற்கான மருத்துவர்களின் நிபுணத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
இதற்கான மருத்துவக் குழு, மருத்துவ உபகரணங்கள், அவற்றின் தரச்சான்று ஆகியன பரிந்துரைகளின்படி இருக்க வேண்டும் என்பதையும், அத்துடன், செயற்கை கருத்தரிப்பில் ஈடுபடும் ஒவ்வொரு கருத்தரிப்பு மையமும், தேசிய பதிவேட்டில் பதிவுசெய்து, அதற்கான உரிமத்தைப் பெற்று இருக்கவேண்டும், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

கருத்தரிப்பு வங்கிகள் (ART bank) மற்றும் வாடகைத் தாய் முறையை (Surrogacy) இன்னும் இறுக்கிப் பிடிக்கும் இந்தச் சட்டம், வணிகரீதியான செயற்கை கருத்தரிப்பில் யாரும் ஈடுபடக்கூடாது என்பதை அழுத்தமாக எடுத்துக்கூறுகிறது.
இவையனைத்தும் முறையாக மாநில அரசின் மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்தச் சட்டம், சிகிச்சை முறைகளில் முறைகேடுகள் எதுவும் கண்டறியப்பட்டால் 25 லட்சம் வரை அபராதம் மற்றும் 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை என, அதற்கான தண்டனைகளையும் வலிமைப்படுத்தியுள்ளது.
இன்று, வீதிக்கு இரண்டு ஃபாஸ்ட் புட் கடைகளைத் திறந்த நாம்தான், அதே வீதியில் ஒரு செயற்கைக் கருத்தரிப்பு மையம் அமையவும் காரணமாக இருக்கிறோம். அவற்றின் வகைகளையும் முறைமைப்படுத்தும் சட்டங்களையும் தெரிந்து கொண்ட நாம், இனி அவற்றின் செயல்பாடுகளை, அதாவது செயற்கை கருத்தரிப்பில் ஏன், எதற்கு எப்படியைத் தெரிந்துகொள்வோம்.!
பூப்பு முதல் மூப்பு வரை பயணம் தொடர்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
