கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.. துரைவைகோ முடிவின் பின்னணி என்ன?
சிபி சத்யராஜுக்கு திருப்புமுனையா, டென் ஹவர்ஸ்? - திரை விமர்சனம்!
நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவான டென் ஹவர்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
காவல்துறை ஆய்வாளரான கேஸ்ட்ரோ (சிபி சத்யராஜ்) வழக்குகளை ‘விசாரிக்க வேண்டிய விதத்தில்’ விசாரிப்பவர். அவர் சரகத்தில் குற்றங்கள் நடந்து அதைச் செய்த குற்றவாளிகள் சிக்கினால் கிரிக்கெட் பேட்டில் ரத்தம் வரும் அளவிற்கு அடிப்பவர். அப்படிப்பட்டவர் சபரிமலை செல்வதற்குத் தயாராகிக்கொண்டிருக்கும்போது ஒரு இளம்பெண் காணாமல் போனதாக புகார் வருகிறது. உடனே, தேடுதலில் இறங்குகிறார்.
அதேநேரம், சென்னையிலிருந்து கோவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஒரு ஆம்னி பேருந்தில் கொலை நடக்கிறது. பேருந்து சரியாக கேஸ்ட்ரோ சரகத்திற்குள் வருவதால் அந்த வழக்கையும் கையிடுக்கிறார். ஒரே இரவு. 10 மணி நேரத்திற்குள் காணாமல்போன இளம்பெண் என்ன ஆனார்? பேருந்து பயணியைக் கொன்றது யார்? என்கிற கேள்விகளுக்கு பரபரப்பான பதிலைச் சொல்ல முயன்ற கதையே டென் ஹவர்ஸ்.
இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு நன்றி தெரிவித்து கதையை ஆரம்பிக்கிறார். ஒரே இரவில் என்னென்ன நடக்கிறது என கைதி பாணியில் சொல்லலாம் என நினைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். படம் துவங்கும்போது எந்தக் காட்சிகளும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் விறுவிறுப்பாக பறக்கிறது. கிரைம் திரில்லர் கதை என்பதால் எங்கும் சலிப்பு தட்டிவிடக்கூடாது என்பதற்காக இயக்குநர் ஒரு காட்சியின் தீவிரம் முடிவதற்குள் அடுத்த காட்சியைக் காட்டுகிறார். என்ன நடக்கிறது என நம்மை ஊகிக்க விடாத சில காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தன. ஆனால், இதுவரை கேட்டு சலித்துப்போன வசனங்களைப் பேசி காட்சிகளிலுள்ள பலத்தைக் கெடுக்கின்றனர்.
படத்தில் காதல் திருமணம் செய்வதற்காக ஒரு இணை வீட்டைவிட்டு பேருந்தில் பயணிக்கின்றனர். அதே பேருந்தில் பெற்றோர் பேச்சைக் கேட்காமல் காதல் திருமணம் செய்து வயிற்றில் குழந்தையுடன் இருப்பதாக ஒரு பெண் ஆதங்கப்படுகிறார். அக்காட்சியை இயக்குநர் எமோஷனலாக காட்டுகிறார். என்ன சொல்ல வருகிறார்? பெற்றோரை மீறி காதல் திருமணம் செய்யக்கூடாது என்றா? இப்படியான, காலாவதியான சிந்தனைகளைக் கதைக்குள் புகுத்தி விறுவிறுப்பு என்கிற பெயரில் கடுமையாக சோதிக்கிறார்கள்.
முதலில் கிரைம் திரில்லர் என்றாலே அதில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகள் இடம்பெற வேண்டும் என இயக்குநர்கள் ஏன் திட்டமிடுகின்றனர் எனத் தெரியவில்லை. கதைக்குத் தேவையென்றால் பயன்படுத்தலாம். ஆனால், மிக அபத்தமாக, சிறுமியிலிருந்து பத்திரிகைதுறையைச் சேர்ந்த பெண் வரை படத்தில் இரையாகிக்கொண்டே இருக்கின்றனர். இப்படியான காட்சிகளை வைத்தால் கிரைம் திரில்லர் சூடுபிடிக்கும் என ஒரு இயக்குநர் யோசிப்பார் என்றால் அது சிந்தனை வறட்சியைத்தான் குறிக்கிறது.
விறுவிறுப்பான திரைக்கதை அமைந்தாலும் ஒரு கொலைக்குப் பின்பான உணர்ப்பூர்வமான காரணம் எதுவுமில்லை. ஏன் கொல்லப்பட்டார் என்பதற்குக் காரணம் இருந்தாலும் கொலை செய்யப்பட்டவரின் கதாபாத்திரம் பெரிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. ஊகிக்கமுடியாதபடி காட்சிகளை உருவாக்கிய இயக்குநர் அதற்கான வலுவைக் கொடுக்காமல்விட்டது கதையையே கெடுத்துவிட்டது.
ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் குறித்து முரணான பார்வைகளை இயக்குநர் பதிவு செய்கிறார். தவறான செயல்களுக்கு அவர்கள் துணைபோவதுபோல் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆம்னி ஓட்டுநர்கள் சங்கத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பினாலும் கிளம்பலாம்.
சிபி சத்யராஜுக்கு நடிப்பதற்கான இடங்களும் பெரிதாக இல்லை. ஆவேசமாக குற்றவாளிகளைத் தாக்குகிறார். நான் யாரெனத் தெரியுமா? என பில்டப் செய்கிறார். ஆனால், எதுவுமே உதவவில்லை. படத்தின் ஆரம்பத்தில் சிபி எப்படிப்பட்ட காவல் அதிகாரி என்கிற கதை ஒன்று சொல்லப்படுகிறது. அது நன்றாக இருந்தது. ஆனால், அதை படத்தின் நடுவில் கொண்டுவந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். துவக்கத்திலேயே இப்படி ஒரு அதிகாரியா என பலமாகக் காட்டி மெல்ல மெல்ல கதை வேகத்தில் நாயக பிம்பம் உடைவது பின்னடைவு.
படத்தின் உருவாக்கத்திற்கு ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் கதைக்கு ஏற்ப கச்சிதமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன. சில சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தது. ஆனால், கதை உணர்வுப்பூர்வமாக பதிவாகவில்லை என்பதால் சுமாரான படமாகவே டென் ஹவர்ஸ் எஞ்சுகிறது.