கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.. துரைவைகோ முடிவின் பின்னணி என்ன?
`ஓசன்னா... தேவனே எம்மைக் கைவிடாதிரும்' - இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஏன் நினைவுக்கூற வேண்டும்?
மனித குல வரலாற்றில் மோசமான இரவுகளில் ஒன்று. அவரை அவர்கள் அறிவார்கள். அவர் ஆலயங்களிலும் பொது இடங்களிலும் பிரசங்கம் செய்பவர். மதம் வணிகமானபோது அதற்கு எதிராகக் குரல் எழுப்பி, 'கடவுளின் வீட்டை மீட்க வேண்டும்' என்றவர். ஆனால் அப்போதெல்லாம் அவரைக் கைது செய்யவில்லை. ஆனால் ஒரு இரவில் திருடனையும் கொள்ளைக்காரனையும் கைது செய்வதுபோல அவரைக் கைது செய்தார்கள்.
அப்படி நடக்கப்போவதை அவர் அறிந்தே இருந்தார். கைது செய்யப்படுவதற்கு சில கணங்களுக்கு முன்பு அவர் கர்த்தரை நோக்கி முழங்கால் இட்டு ஜபம் செய்தார்.
'பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிச் செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது' என்று ஜபம் செய்தார்.

இந்த மனித வாழ்க்கை நிலையில்லாதது. அழிந்துபோகக் கூடியது. நீதியின் வழியில் நடப்பவர்களுக்கு மிகவும் கடினமானது, அது தேவனின் குமாரனாகவே இருந்தாலும். இயேசு தேவனின் ஒரே குமாரன். அதை அவரை அறிந்த அனைவரும் அறிவார்கள்.
அவர் தேவனின் ராஜ்ஜியம் குறித்து மக்களிடையே பிரசங்கம் பண்ணினார். 'அன்பே பிரதானம்' என்று போதித்தார். ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் அநேகருக்குப் பகிர்ந்துகொடுத்தார். அவர் பிய்த்துக்கொடுத்தது அப்பங்களை அல்ல அன்பை. அன்பு ஒன்றுதான் கொடுக்கக் கொடுக்க வளரும்.
இறந்தவர்களை பிழைக்கச் செய்தார். முடமானவன் அவரின் ஒரு சொல்லில் எழுந்து நடந்தான். அவரின் வஸ்திரத்தைத் தொட்டவன் வியாதி நீங்கி குணம் அடைந்தான். இப்படி அவரை நம்பியவர்களுக்கெல்லாம் அவர் நன்மையையே செய்துவந்தார். ஆனாலும் அவர் அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார்.
பஸ்காபண்டிகைக்கு முன் தின இரவில் இயேசுவைக் கைது செய்ய பிரதான ஆசார்யரும் வீரர்களும் கூட்டமாக வந்தனர். அப்போது கைது செய்ய வந்தவர்களில் ஒருவனின் காதை சீடர் ஒருவன் வாளால் வெட்டினான். அந்த கணத்தில் இயேசு துடித்துப்போனார். 'ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு' என்று உபதேசம் செய்தவர் அல்லவா... தாக்கப்பட்டவனின் காதைத் தொட்டார். அது மீண்டும் ஒட்டிக்கொண்டது. அந்த அற்புதத்தைக் கண்டபின்னும் அவர் கைது செய்யப்பட்டார்.
குணம் அடைந்தவன் அவர் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டபோது எப்படித் துடித்திருப்பான்...
அதன்பின் நடந்த விஷயங்களை கண்ணீர் பெருகாமல் நினைவுகூர்வதும் கடினம். அவர் தேவனின் குமாரர் என்பதை மறந்துவிடுவோம். ஒரு சாமானியன் என்றே வைத்துக்கொள்வோம். யாரோ ஒரு மனிதனின் கண்களை மூடி அவன் கன்னத்தில் அறைந்து அவதூறான வார்த்தைகளைச் சொல்லி அவனை முரட்டுத்தனமாக அடிப்பதை யார்தான் பார்த்துக்கொண்டிருக்க முடியும்...

ஆனால் அந்த நகரத்தின் மக்கள் சந்தோஷமாகப் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அவரை பிலாத்து என்னும் ஆளுநரிடம் விசாரணைக்காக அனுப்பினர். விசாரணை செய்தவரால் இயேசுவிடம் எந்தக் குற்றமும் காணமுடியவில்லை. அவரை விடுதலை செய்ய விரும்பினான்.
ஆனால் பைத்தியம் பிடித்தவர்கள்போல் கூடியிருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு அஞ்சினான். 'பஸ்கா பண்டிகையின்போது கைதிகளில் ஒருவரை விடுதலை செய்ய அதிகாரம் இருப்பதாகவும் அது இந்த இயேசுவா அல்லது பராபஸ்ஸா' என்று கேட்டார்.
பராபஸ் ஒரு கொலைகாரன். ஆனால் இயேசுவோ மக்களோடு மக்களாக மக்களுக்காக வாழ்ந்தவர். ஆனால் மக்கள் அந்த கணத்தில் அவரைக் கைவிட்டார்கள். பராபஸ் விடுதலையாக இயேசுவை சிலுவையில் அறையுங்கள் என்று கூச்சலிட்டனர்.
இயேசு தன் கடைசி தருணத்தில், 'ஏலி ஏலி லாமா சபக்தானி' என்று சொன்னார். 'தேவனே தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்' என்பது அதன் பொருள். ஆனால் உண்மையில் தேவன் அவரைக் கைவிடவில்லை. யாருக்காகப் பேசினாரோ அந்த மக்கள்தான் அவரை முதலில் கைவிட்டனர்.
மன்னர் அவர்களிடத்தில், 'இந்த நீதிமானுடைய ரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்' என்றான். அப்போதாவது அவர்கள் விழிப்படைந்திருக்க வேண்டும். ஆனால் வெறுப்பு அவர்களின் கண்களை மறைத்தது.
'இவனுடைய ரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக' என்று சொன்னார்கள். அதன்பின் நடந்தவற்றைக் கண்டு அந்த நகரின் பெண்கள் கலங்கி அழுதனர். இயேசுவை கபாலஸ்தலம் என்னும் சிறு குன்றுக்கு அழைத்துச் சென்று அங்கே இரண்டு திருடர்களுக்கு மத்தியில் சிலுவையில் அறைந்தனர்.

இயேசுவின் உடலில் இருந்த ரத்தம் ஒவ்வொரு சொட்டாக அந்த நிலத்தின் மீது விழுந்தது. அது வீணான ரத்தம் அல்ல. கல்வாரி சிலுவையில் நமக்காக உருவாக்கப்பட்ட ஒப்பந்தம். பரலோகத்தில் இருக்கும் பிதாவானவர் தன் ஒரே குமாரனான இயேசுவை சிலுவையில் மரிக்கக் கொடுத்தார். யாரெல்லாம் பாவத்தினால் தேவனின் சந்நிதியில் இருந்து விலகிப்போகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இயேசுவின் ரத்தத்தினால் மீட்படைய வழி செய்தார்.
அன்றிலிருந்து இன்றுவரை அவரே சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார். யார் எல்லாம் அன்பின் வழியில் அனைத்து உயிர்களையும் நேசிக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் தன்னிடம் சேர்த்துக்கொள்ள அவர் ஆயத்தமாக இருக்கிறார்.
ஒவ்வொரு புனித வெள்ளி அன்றும் நாம் நினைவு கூரவேண்டியது இயேசுவின் சிலுவை தியாகத்தைத்தான். அவரின் தியாகத்தை உணர்ந்து நாம் கண்ணீர் சிந்தும்போது நாம் அவராகவே ஆகிவிடுவோம். அப்போது இறைவன் நமக்குள் வந்து ஆசீர்வதிப்பார்.
அந்த அற்புதம் நிகழ நாம் அனைவரும் அவரை, 'ஓசன்னா' என்று சொல்லி அழைத்துப் பிரார்த்திப்போம். தேவன் எப்போதும் நம்மைக் கைவிடாது காப்பார்.