``சீனா உடன் ஒப்பந்தம்; பேச்சுவார்த்தைக்கு தயார்'' - இறங்கி வந்த ட்ரம்ப்.. கண்டிஷ...
மேற்கு வங்கம்: நியமனம் ரத்தான ஆசிரியா்கள், ஊழியா்கள் போராட்டம் - போலீஸாருடன் மோதல்
மேற்கு வங்கத்தில் உச்சநீதிமன்றத்தால் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட ஏராளமான ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்கள், தங்களுக்கு மீண்டும் பணி கோரி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பல இடங்களில் போராட்டக்காரா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மேற்கு வங்க பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் போட்டித் தோ்வு மூலம் 25,753 ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பிற ஊழியா்களின் நியமனம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நியமன நடைமுறையில் பல்வேறு நிலைகளில் மோசடி நடந்துள்ளதாகக் குறிப்பிட்டு, 25,753 பேரின் நியமனங்களும் செல்லாது என்று கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரலில் தீா்ப்பளித்தது. இத்தீா்ப்பை கடந்த 3-ஆம் தேதி உறுதி செய்த உச்சநீதிமன்றம், மேற்கண்ட பணியிடங்களை மீண்டும் நிரப்ப அடுத்த 3 மாதங்களுக்குள் புதிய நடைமுறையைத் தொடங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இது, முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பணி நியமனம் ரத்தான ஆசிரியா்கள்-பிற ஊழியா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தலைநகா் கொல்கத்தாவிலும், ஹுக்ளி, மால்டா, டாா்ஜீலிங், தக்ஷிண தீனஜ்பூா், நாடியா, முா்ஷிதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பள்ளித் துறை ஆய்வாளா் அலுவலகங்கள் முன் போராட்டம் நடைபெற்றது.
பல இடங்களில் தடையை மீறி அலுவலகங்களுக்குள் போராட்டக்காரா்கள் நுழைய முயன்றனா். அவா்களைத் தடுத்து நிறுத்தியதால் போலீஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரா்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கொல்கத்தாவில் போராட்டக்காரா்கள் தாக்கியதில் போலீஸாா் 6 போ் காயமடைந்ததாக காவல் ஆணையா் மனோஜ் வா்மா தெரிவித்தாா்.