LPG: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு; மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனங...
இபிஎஸ் OUT; செங்கோட்டையன் IN; `காலில் விழுந்த EPS' - `பொம்மை முதல்வர்' - சட்டசபையில் நடந்தது என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஏப்ரல் 7) கூடியது. அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து கவன ஈர்ப்பு நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச எழுந்ததும், சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பு வழக்கம்போல நிறுத்தப்பட்டது. சுமார் கால் மணிநேரம் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில், செங்கோட்டையனைத் தவிர எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக அனைத்து எம்.எல்.ஏக்களும், `டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று ஸ்டாலின் மாடல் அரசே பதவி விலகு... அந்த தியாகி யார்?' என்ற பதாகைகளை ஏந்தியபடி, அந்த வாசகங்களை முழக்கமிட்டபடி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன் பிறகு, முதல்வர் ஸ்டாலின் எழுந்து பேசும்போதுதான் அவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது உரையாற்றிய ஸ்டாலின், ``எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அவரது கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஒரு பிரச்னையைக் கிளப்பி, அதற்காக பிறகு விவாதங்கள் நடைபெற்று, அவை முன்னவர் விளக்கம் தந்த பிறகும் திருப்தியடையாத சூழலில் அவர்கள் வெளிநடப்பு செய்கிறார்கள். `அந்த தியாகி யார்?' என்று பதாகை ஏந்தியிருந்தார்கள்.
எம்.ஜி.ஆர் உருவாக்கிய, ஜெயலலிதா வளர்த்தெடுத்த அதிமுக-வுக்கு, அவர்களுக்குப்பிறகு பொறுப்பேற்ற எதிர்க்கட்சித் தலைவர், தான் சிக்கியிருக்கக்கூடிய பல்வேறு வழக்குகளிலிருந்து யாருடைய காலில் விழுந்தாரோ... விழுந்த நேரத்தில் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கும் அதிமுக தொண்டர்கள்தான் இன்றைக்குத் தியாகிகளாக இருக்கிறார்கள். முதலமைச்சர் பதவியை வாங்குவதற்காக யாருடைய காலில் விழுந்தாரோ அந்த அம்மையார்தான் இன்றைக்கு தியாகியாக இருக்கிறார்" என்று கூறி அமர்ந்த பிறகு மீண்டும் நேரடி ஒளிபரப்பு நிறுத்தத்ப்பட்டது. பின்னர், `அந்த தியாகி யார்?' என்ற பேட்ஜை சட்டையிலிருந்து கழற்றிவிட்டு செங்கோட்டையன் பேசுகையில் நேரடி ஒளிபரப்பு தொடர்ந்தது.
அதேவேளையில், சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ``டாஸ்மாக் ஊழல் குறித்து பேசுவதற்கு அனுமதி கேட்டோம். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை சந்திக்கத் திராணியில்லாத டாஸ்மாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை இன்று நாடியிருக்கிறது. அமலாக்கத்துறை தொடர்புடைய இந்த வழக்குகளை எல்லாம் வேறொரு மாநிலத்திலுள்ள உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் கோரியது.

ஏன் தமிழ்நாட்டிலுள்ள உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது, வேறொரு மாநிலத்துக்கு ஏன் மாற்றவேண்டும் என்று அரசின் டாஸ்மாக் நிறுவனம் கூறியிருக்கிறது என்றுதான் நாங்கள் கேள்வியெழுப்பினோம். இதைப் பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் விசாரணை நடைபெற்றால் அவர்கள் செய்த தவறு ஊடகத்தின் வாயிலாக உடனடியாக மக்களிடத்தில் சேரும். அதை மறைப்பதற்குத் தான் இந்த அரசாங்கம் இப்படித் தில்லு முல்லு வேலை செய்திருக்கிறது" என்று கூறினார்.