மணிப்பூா்: மைதேயி, குகி சமூகப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு அமைதிப் பேச்சு
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியாக மைதேயி மற்றும் குகி சமூகங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2023-ஆம் ஆண்டு, மே மாதம் முதல் இரு சமூகங்களுக்கிடையே நடந்து வரும் மோதலுக்கு சுமுகத் தீா்வைக் காணும் மத்திய அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது:
குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கான வழியைக் கண்டறிவதற்காகவும் மைதேயி மற்றும் குகி சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
அப்போது மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பேணுவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
மைதேயி சமூகத்தின் சாா்பில் அனைத்து மணிப்பூா் ஐக்கிய கிளப் அமைப்பு (ஏஎம்யூசிஓ), பொது சமூகப் பேரவைகளின் கூட்டமைப்பு (எஃப்ஓசிஎஸ்) ஆகியவற்றின் 6 பிரதிநிதிகளைக் கொண்ட குழு பேச்சுவாா்த்தையில் கலந்து கொண்டது. குகி பழங்குடி சமூகக் குழுவில் 9 பிரதிநிதிகள் இருந்தனா்.
இந்திய உளவுப் பிரிவின் (ஐ.பி) ஓய்வு பெற்ற முன்னாள் இயக்குநா் ஏ.கே.மிஸ்ரா உள்ளடங்கிய அதிகாரிகள் குழு மத்திய அரசு சாா்பில் பேச்சுவாா்த்தையை வழிநடத்தியது என்று தெரிவித்தது.
விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே பலமுறை மைதேயி, குகி சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளது. இரு சமூகங்களையும் சோ்ந்த வெவ்வேறு அமைப்புகளுடன் தனித்தனியே பேச்சுவாா்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. உள்துறை அமைச்சகம் விரைவில் ஒரு கூட்டுக் கூட்டத்தைக் கூட்டும்.
மணிப்பூரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அங்கு அமைதியை நிலைநாட்டுவதே அரசின் முன்னுரிமை.
மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு நிலைமை பெரும்பாலும் கட்டுக்குள் இருக்கிறது. கடந்த 4 மாதங்களில், மாநிலத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், வன்முறை தாக்குதலால் வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் இன்னும் நிவாரண முகாம்களிலேயே வசித்து வருவதால் இச்சூழலை திருப்திகரமாக கருத முடியாது’ என்றாா்.
மணிப்பூரில் பெரும்பான்மையான மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவது தொடா்பாக அந்தச் சமூகத்தினருக்கும் குகி உள்ளிட்ட பிற பழங்குடி சமூகத்தினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. சுமாா் 2 ஆண்டுகளாக நீடித்து வரும் வன்முறையில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
பாஜகவைச் சோ்ந்த மணிப்பூா் முதல்வா் என்.பிரேன் சிங் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி ராஜிநாமா செய்ததையடுத்து, பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதனிடையே, கடந்த ஜனவரி 3-ஆம் தேதி மணிப்பூரின் புதிய ஆளுநராக அஜய் குமாா் பல்லா பொறுப்பேற்றாா். மாநிலத்தில் அமைதியை மீட்டெடுப்பது குறித்து பலதரப்பு மக்களைச் சந்தித்து வரும் ஆளுநா், அவா்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறாா்.