அருள் தரும் தட்சிணாமூர்த்தி
சிவனின் 25 திருமேனிகளில் ஒன்பதாவதாக இடம்பெறுபவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. நட்சத்திரங்கள் 27 என்பதற்கேற்ப கருவறைக் கோயில் தரையில் இருந்து, உச்சிக்கோபுரக் கலசத்தின் உயரம் 27 அடியாகும். 9 கிரகங்களுக்கு அதிபதியாக 9 அடி உயர ஆஜானுபாகுவான தோற்றத்துடன், 12 ராசிகளுக்கும் அதிபதியாகவும், அவருக்கு நிழல் தரும், அவர் அமர்ந்திருக்கும் பீடத்தையும் சேர்த்து 12 அடி உயரம் கொண்டுள்ளார். இன்முகத்துடன் தன்னை நாடிவரும் பக்தர்களின் மனக் குறைகளை அறிந்து நிவர்த்தி செய்பவராக இவர் விளங்குகிறார்.
இத்திருமேனியை 2010-இல் பரனூர் அண்ணா என்று அழைக்கப்படும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி சுவாமிகளால் கிரக ஸ்தாபிதமும், யந்திர ஸ்தாபிதமும் நடைபெற்றது. குடமுழுக்கு விழா 2013}இல் நடைபெற்றது. குரு ஸ்தலமான ஆலங்குடிக்கு அடுத்து தமிழ்நாட்டில் தென்முக கடவுளுக்கான தனித்திருக்கும் தனிப்பெரும் கோயிலாக அமைந்துள்ளது பையூரின் சிறப்பாகும். இருபுறமும் ஆறுகளுடனும் 18 கோயில்கள் நிறைந்த கோயில் பேரூராகவும் பையூர் விளங்குகிறது. 19-வது கோயிலாக பையூரில் ஸ்ரீ ஞானகுரு தட்சிணாமூர்த்தி கோயில் அமைந்துள்ளது.
பையூரின் மேற்கே தென்பெண்ணை ஆறு பிரிந்து வடக்கே தென்பெண்ணை ஆறாகவும் ஊரின் தெற்கே கோரைகள் சூழ்ந்த கோரையாகவும் ஓடி, கிழக்கே மூன்று கி.மீ. தொலைவில் மீண்டும் கலந்து, பெரிய ஆறாக வடிவெடுக்கும் தென்பெண்ணையாறு, வங்கக் கடலில் சென்று கலக்கிறது. பைத்து என்றால் பசுமை நிறைந்தது என்பது பொருளாகும். அந்த வகையில், பைத்து + ஊர் = பைத்தூர். பசுமை நிறைந்து பசுமையான தோற்றப் பொலிவுடன் இவ்வூர் விளங்குதால் பசுமையூர் என்று அழைக்கப்பட்டு, இதுவே "பையூர்' என மருவியதாகக் கூறப்படுகிறது. இவ்வூரில் அமைந்துள்ள தேவகிரீஸ்வரர் சிவன் கோயிலின் அம்மன் பெயர் மரகதாம்பிகையாகும். மரகதம் என்பது பச்சை நிறத்தைக் குறிப்பதாகும். இங்கு ஸ்ரீ ஞானகுரு தட்சிணாமூர்த்தி கோயிலில் மேல் திசையில் அமைந்துள்ளது. விழுப்புரம் அருகே திருவெண்ணெய் நல்லூர் தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் பையூர் அமைந்துள்ளது.
பனையபுரம் அதியமான்